அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குரூப் ஏ பிரிவில் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.
இதில்.நவம்பர் 9ஆம் தேதியான இன்று சிட்னியில் நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளும், நவம்பர் 10ஆம் தேதியான நாளை அடிலெய்டில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
கடந்த 2013ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி, அதன்பிறகு ஒருமுறைகூட ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. ஆனால் தற்போது நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் 2 பிரிவில் இடம்பெற்று புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் முதல் இடத்தையும் பிடித்து அரையிறுதிவரை முன்னேறி அசத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி இந்திய அணியில் இருக்க கூடிய பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் அனைவரும் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வருவதால், இம்முறை கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகிறது.
இதனையடுத்து அரையிறுதி போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற அடிலெய்டு மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற வலைப்பயிற்சியின்போது இந்திய அணியின் த்ரோ டவுன் நிபுணரான எஸ் ரகு ராகவேந்திராவின் பந்துவீச்சை எதிர்கொண்ட கேப்டன் ரோஹித் ஷர்மா வழக்கமான பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டார்.
ஆனால் ரகு வீசிய புல் ஷாட்டை அடிக்க முற்பட்ட ரோஹித் அதை தவறவிட்ட நிலையில் அப்பந்து அவரது கையை பதம் பார்த்தது. இதனால் வலி தாங்கமுடியாமல் கையைப்பிடித்து கொண்டு அவர் அப்படியே அமர்ந்தார். உடனே மைதானத்திற்கு விரைந்து வந்த பிசியோ கமேஷ் ஜெயின் மற்றும் குழு மருத்துவர் சார்லஸ் மின்ஸ் ஆகியோர் ரோஹித்தை சோதித்து பார்த்த பிறகு, சிகிச்சை அளித்து களத்தில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டார். எனினும் ஐஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டு, நீண்ட நேரத்திற்கு பிறகு மீண்டும் ரோஹித் பயிற்சிக்கு திரும்பினார்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஃபார்முடன் போராடி வரும் ரோஹித்தால் பெரிய ரன்கள் அடிக்க முடியவில்லை. குறிப்பாக நெதர்லாந்து அணிக்கு எதிராக அவர் அடித்த 53 ரன்களையும் சேர்த்து மொத்தமாக ஐந்து போட்டிகளில் 89 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் காயத்தின் தன்மை குறித்து இன்னமும் அறிக்கை வெளிவரவில்லை. இருப்பினும் மாலை வெளியாகும் மருத்துவ அறிக்கைக்கு பிறகுதான் ரோஹித் ஷர்மா, அரையிறுதியில் விளையாடுவாரா, மாட்டாரா என்பது குறித்து தெரிய வரும் என்ற நிலையில், ரோஹித்துக்கு ஏற்பட்ட காயம் அரையிறுதி போட்டியில் அவர் விளையாட எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be the first to comment on "இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா காயம் பயத்தை முறியடித்தார்."