மெல்போர்ன்: நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், குரூப் 1 பிரிவில் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 பிரிவில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இதில் ஜிம்பாப்வே வீழ்த்தியதன் மூலம் குரூப் 2வில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து நான்காவது முறையாக அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள இந்திய அணி, வரும் நவம்பர் 10ஆம் தேதி குரூப் 1 பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணியுடன் அடிலெய்டில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இந்நிலையில் சமபலமாக உள்ள இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, “இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி நிச்சயம் சவால் நிறைந்த போட்டியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய அவர், “ஜிம்பாப்வேக்கு எதிராக பேட்டிங் ,பந்துவீச்சு, ஃபில்டிங் என அனைத்திலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். முன்பே நாங்கள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தபோதும், ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியை முக்கிய ஆட்டம் போல் எதிர்கொண்டு விளையாடினோம்.
தற்போது எங்களுடைய கவனம் எல்லாம் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் மீது உள்ளது. இரண்டு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால், அரையிறுதி போட்டி நடைபெறவுள்ள ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு விளையாடுவது மிக முக்கியமான ஒன்று.
அண்மையில் தான் அரையிறுதி போட்டி நடைபெறவிருக்கும் அடிலெய்ட் மைதானத்தில் நாங்கள் ஒரு போட்டியில் விளையாடினோம். இருப்பினும் அரையிறுதி போட்டி இங்கிலாந்து அணிக்கு எதிராக என்பதால் இப்போட்டியில் கூடுதல் கவனத்துடன் இருந்து, ஆடுகளத்தின் தன்மையை விரைவில் உள்வாங்கி கொள்ள வேண்டும். ஏனெனில் இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அவர்களை எதிர்கொள்வது உண்மையில் பெரும் சவாலாக இருக்கும்.
அதிலும் அதிக அழுத்தம் கொண்ட இப்போட்டியில் நாங்கள் நன்றாக ஆடியாக வேண்டும். எனவே அரையிறுதி சுற்று வரை எப்படி வந்துள்ளோம் என்பதை மறந்துவிடாமல் அதை புரிந்துகொண்டு இதுவரை செயல்பட்டதுபோலவே சிறப்பாக செயல்பட்டு,ஒவ்வொரு வீரர்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க வேண்டும். மேலும் சூழலுக்கு ஏற்ப மாறி, அதற்கேற்ப சரியான திட்டங்கள் வகுத்து, அதை சரியாக செயல்படுத்துவதே முக்கியமானதாக இருக்கும்.
நாங்கள் அரையிறுதிக்கு சென்று விட்டோம் என்று தெரிந்தும், ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியை காண, இவ்வளவு பெரிய ரசிகர்கள் நேரில் வந்தது ஆச்சரியம் அளிக்கிறது. அணியின் சார்பாக நான் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதேபோன்ற ஆதரவை அரையிறுதியிலும் ரசிகர்கள் எங்களுக்கு கொடுப்பார்கள் என நம்புகிறேன்” இவ்வாறு ரோஹித் ஷர்மா என்று தெரிவித்தார்.
Can you be more specific about the content of your enticle? After reading it, I still have some doubts. Hope you can help me. https://accounts.binance.com/en/register?ref=53551167