மெல்போர்ன்: டி20 உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டம் நேற்று இந்தியா- ஜிம்பாப்வவே அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் ஷர்மா, முசர்பாணி வீசிய பவுன்சர் பந்தை புல் ஷாட் ஆட முற்பட்டு 15(13) ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 26(25) ரன்களுடன் சீன் வில்லியம்ஸ் பந்துவீச்சில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசிய கே.எல்.ராகுல் 51(35) ரன்கள் எடுத்தபோது சிக்கந்தர் ராஸா பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதன்பின் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக வாய்ப்புபெற்ற ரிஷப் பந்த் 3(5) ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்ததால், 13.3 ஓவர்களில் இந்திய அணி 101/4 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறியது. ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா-சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடி காட்டினர். இதில் நிதானமாக நின்று பார்ட்னர்ஷிப் கொடுத்த ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் 18(18) ரன்களின்போது ஆட்டமிழந்து வெளியேறினாலும், கடைசி பந்துவரை ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை சிதறடித்த சூர்யகுமார் 4 சிக்ஸர், 6 பவுண்டரி உட்பட 61(25) ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களை குவித்தது. இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரரான வெஸ்லி மதவெரே, புவனேஷ்வர் குமார் வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ரேஜிஸ் சகாப்வா ரன் ஏதுமின்றி அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
அவர்களைத்தொடர்ந்து தொடக்க வீரரான கிரேய்க் எர்வின் 13(15) ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சிலும், சீன் வில்லியம்ஸ் 11(18), முன்யங்கா 5(4) ஆகியோர் முகமது ஷமி பந்துவீச்சிலும் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 7.3 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 36/5 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறியது.
ஆனால் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த சிக்கந்தர் ரஸா-ரியான் பரவல் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் 35(22) ரன்களுடன் ரியான் பர்லும், ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் 34(24) ரன்களுடன் சிக்கந்தர் ரஸாவும் விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில் வெலிங்டன் மசகட்சா 1(7), ரிச்சர்ட் நகரவா 1(2),டெண்டாய் சதாரா 4(4) ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறியதால், ஜிம்பாப்வே அணி 17.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 71 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "ஜிம்பாப்வேவை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது"