அடிலெய்ட்: கடந்த ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதந்தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடி வரும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வு செய்து ஐசிசி விருது அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காணும் விதமாக 3 வீரர்களின் பெயரை ஐசிசி நிர்வாகம் நேற்று பரிந்துரை செய்துள்ளது.
இதில் கடந்த மாதம் வெறும் 4 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதன்முறையாக ஆண்களுக்கான மாதாந்திர ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளார். ஆசியக் கோப்பை தொடரில் தனது கம்பேக்கை கொடுத்த கோஹ்லி தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். அதிலும் நாட் அவுட்டாகாமல் அதிக ஸ்கோர்களை அடித்துள்ள அவர், அக்டோபர் மாத தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 49* ரன்களையும், டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 82* ரன்களையும், நெதர்லாந்துக்கு எதிராக 62* ரன்களையும் விளாசி அசத்தியுள்ளார்.
குறிப்பாக இந்திய அணி பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் தடுமாறிய போது , ஆடிய இன்னிங்ஸ் தான் தனது மிகச்சிறந்த இன்னிங்ஸ் என குறிப்பிட்டிருந்த விராட் கோலியின் ஆட்டத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த விருதுக்காக விராட் கோலி மட்டுமின்றி கடந்த மாதம் 7 இன்னிங்ஸ் விளையாடி 303 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்காவை சேர்ந்த டேவிட் மில்லர் மற்றும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்தி வரும் ஜிம்பாப்வேவின் சிகந்தர் ராசா ஆகியோரும் ஐசிசி நிர்வாகத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் சர்வதேச வீரர்கள், ஊடக பிரதிநிதிகள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் வாக்களிப்பதன் அடிப்படையில் இதன் வெற்றியாளர்களை ஐசிசி நிர்வாகம் விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் மூவரில் கோஹ்லிக்கு தான் அந்த பெருமை கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஒருவேளை அப்படி நடந்தால் முதன்முறையாக ஐசிசி ப்ளேயர் ஆஃப் தி மந்த் விருதை விராட் கோலி பெறுவார்.
அதேபோல, மகளிருக்கான மாதாந்திர ஐசிசி சிறந்த வீராங்கனை விருதுக்காக மகளிர் ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவர்களுடன் பாகிஸ்தானின் நிடா டாரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஐசிசி வழங்கும் மாதாந்திர சிறந்த வீரர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டுள்ளார்."