அடிலெய்ட்: டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், அரையிறுதிக்கு முன்னேற கண்டிப்பாக வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் நேற்று வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி களமிறங்கியது.
அடிலெய்டில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் ஷர்மா 2(8) ரன்னுக்கு ஹசன் மஹ்முத் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த கே.எல்.ராகுல் – விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இதில் அதிரடியாக விளையாடி 31 பந்தில் அரைசதம் விளாசிய ராகுல் அடுத்த பந்திலேயே ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் 30(16) ரன்களுடன் ஷாகிப்பிடமே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 5(6), தினேஷ் கார்த்திக் 7(5), அக்ஸர் படேல் 7(6) ஆகியோர் பெரியளவில் சோபிக்காமல் ஏமாற்றமளிக்க, மறுமுனையில் கோஹ்லி தனது 36வது சர்வதேச டி20 அரைசதத்தைப் பதிவுசெய்தார். இறுதியில் 19வது ஓவரில் பவுண்டரியும், சிக்சருமாக விளாசிய கோஹ்லி 64(44) ரன்களுடனும், கடைசி ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர், பவுண்டரி என விளாசிய அஸ்வின் 13(6) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை குவித்தது. இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரரான லிட்டன் தாஸ் முதல் பந்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 59(26) ரன்களுடனும், நிதானமாக விளையாடிய ஷான்டோ 7(16) ரன்களுடனும் களத்திலிருந்தனர்.
இந்நிலையில் வங்காளதேச அணி 7 ஓவர்களில் 66/0 ரன்களை எடுத்திருந்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் 16 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில், வங்காளதேச அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் மீண்டும் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்காளதேச அணிக்கு பேரதிர்ச்சியாக லிட்டன் தாஸ் 60(27) ரன்களுடன் ரன் அவுட்டாக, போட்டியே தலைகீழாக மாறியது.
ஏனெனில் தொடர்ந்து களத்திலிருந்த ஓபனர் ஷான்டோ 21(25) ரன்களுடன் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஷாகிப் அல் ஹசன் 13(12) மற்றும் அஃபிஃப் ஹொசைன் 3(5) ஆகியோர் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சிலும், யாசிர் அலி 1(3) மற்றும் மொசடெக் ஹொசைன் 6(3) ஆகியோர் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் வங்காளதேச அணிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில், அர்ஷீதீப் சிங் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட நூருல் ஹசன் 6,4 என அடித்து ஆட்டத்தின் பரபரப்பை கூட்டினார்.
ஆனால் கடைசி பந்தில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில், அர்ஷ்தீப் சிங் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்ததால், இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன்,அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.