இந்திய அணியில் பிரித்வி ஷா தேர்வு செய்யப்படாதது குறித்து இந்திய தலைமை தேர்வாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-100278

மும்பை: ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு நியூசிலாந்து மற்றும் வங்காளதேசத்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதில் வரும் நவம்பர் 18 முதல் 30 வரையிலான தேதிகளில் நியூசிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரிலும், டிசம்பர் 4 முதல் 26 வரையிலான தேதிகளில் வங்காளதேசத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி பங்கேற்று விளையாடவுள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேச  சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ செவ்வாய்க்கிழமையன்று(அக்:31) அறிவித்தது. இதில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் பலருக்கு நியூசிலாந்துடனான தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் அதிரடி வீரர் ரிஷப் பந்த் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலும், உள்ளூர் தொடர்களில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பிரித்வி ஷா, மீண்டும் இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சிக் கோப்பை தொடரில் 6 போட்டிகளில் 355 ரன்களும், சையத் முஷ்தாக் அலி கோப்பை தொடரில் 7 போட்டிகளில் 191.27 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 285 ரன்களும் குவித்துள்ள பிரித்வி ஷா இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தனது அதிருப்தியை வெளிப்டுத்தியுள்ள பிரித்வி ஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் சாய் பாபாவின் புகைப்படத்தை பகிர்ந்து, ”சாய் பாபா.. நீ அனைத்தையும் பார்க்கிறாய் என நம்புகிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பிரித்வி ஷா ஏன் டி20 அணியில் சேர்க்கப்படவில்லை என்பதற்கான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில்,” பிரித்வி ஷா நன்றாக செயல்படுகிறார். அவர் எந்த தவறும் செய்யவில்லை. அவருக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும். தேர்வாளர்கள் அவருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். விரைவில் இந்திய அணியில் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் ” என்று சர்மா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியில் சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாதது குறித்து எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்த சேத்தன் சர்மா இதுகுறித்து கூறுகையில், “சர்ஃபராஸ் கானை பொறுத்தவரை, அவர் இந்திய அணியில் இடம்பெற நல்ல போட்டியாளர் தான். அவருக்கு இந்தியா ஏ அணியில் வாய்ப்புகளை வழங்கியுள்ளோம். இருப்பினும் தற்போது அணியில் இடமில்லை. ஆனால் அவருக்கு நிச்சயமாக விரைவில் வாய்ப்பு கிடைக்கும்” இவ்வாறு சர்மா  தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "இந்திய அணியில் பிரித்வி ஷா தேர்வு செய்யப்படாதது குறித்து இந்திய தலைமை தேர்வாளர் கருத்து தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*