மொஹாலி: டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நிர்வாகம் அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஓபனிங்கில் களமிறங்கி விராட் கோலி சதமடித்ததை தொடர்ந்து, அவரையே ரோஹித்துடன் தொடக்க வீரர்களில் ஒருவராக களமிறக்கலாம் என்ற கருத்து நிலவிவருகின்றது.
டி20 கிரிக்கெட் தொடரை பொறுத்தவரை ஓபனிங்கில் கோஹ்லி அபாரமாக விளையாடியிருப்பதால் தான் இந்த வலியுறுத்தல் வலுக்கிறது. அதுமட்டுமின்றி முன்னாள் வீரர்கள் பலரும் கோஹ்லியையே ஓபனிங்கில் இறக்கலாம் என்று கருத்து தெரிவித்துவருக்கின்றனர்.
இந்நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி வரும் செவ்வாய்க்கிழமையன்று மொஹாலியில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் நேற்று முதல் பயிற்சியை தொடங்கினர்.
இப்பயிற்சி தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா, தனது ஓபனிங் பார்ட்னர் குறித்து மௌனம் கலைத்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், “ அணியில் பல விருப்பத்தேர்வுகள் இருப்பது எப்போதும் நல்லது. ஆனால் உலகக் கோப்பை போன்ற ஒரு தொடருக்கு செல்வதற்கு முன் உங்கள் அணியில் நெகிழ்வுத்தன்மை இருப்பது ரொம்ப முக்கியம். எந்தவொரு நிலையிலும் சிறந்த முறையில் வீரர்கள் பேட்டிங் செய்ய வேண்டும். அதற்காக நாங்கள் புதிதாக ஏதாவது செய்ய முயற்சிக்கும்போது, அது ஒரு பிரச்சனை என்று அர்த்தமல்ல.
ஆசியக் கோப்பை தொடரின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி தொடக்க வீரராக விளையாடிய விதத்தை கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். உலகக் கோப்பை போட்டிக்கு நாங்கள் மூன்றாவது தொடக்க வீரரை அழைத்துச் செல்லவில்லை. ஏனெனில் எங்களுக்கு அந்த ஒரு வாய்ப்பை கோஹ்லி கொடுப்பார். தேவை ஏற்பட்டால் ஒரு சில போட்டிகளில் அவர் தொடக்க வீரராகவும் களமிறங்குவார்.
ஆனால் உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை கே.எல்.ராகுல் தான் இந்திய அணியின் தொடக்க வீரர். டாப் ஆர்டரிலில் அவருடைய இருப்பு அணிக்கு மிகவும் முக்கியம். அந்த நிலையை நாங்கள் அதிகம் பரிசோதிக்க விரும்பவில்லை. அவரது சிறப்பான ஆட்டம் சில நேரங்களில் கவனிக்கப்படாமல் போயிருக்கின்றன. ஆனால் இந்திய அணிக்கு அவர் மிக முக்கியமான வீரர்.
எங்களைப் பொறுத்தவரை, எங்கள் சிந்தனை செயல்பாட்டில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்பதை அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எந்தவொரு குழப்பமும் எங்களுக்கு இல்லை. கே.எல்.ராகுல் அணிக்காக என்ன கொண்டு வருகிறார் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரியும். அவர் ஒரு தரமான வீரர் மட்டுமல்ல அணிக்கு மிகவும் முக்கியமானவர், மேட்ச் வின்னர். ஆகையால் அவர் தொடக்க வீரராக இருப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது” இவ்வாறு ரோஹித் ஷர்மா தெரிவித்தார்.
Be the first to comment on "டி20 உலகக் கோப்பைக்கான இந்தியா அணியின் தொடக்க ஜோடியை ரோஹித் ஷர்மா உறுதிப்படுத்தினார்."