சூர்யகுமார் யாதவின் மிரட்டலான பேட்டிங்கால், ஹாங்காங்கை வீழ்த்திய இந்திய அணி சூப்பர் 4-ல் நுழைந்தது.

www.indcricketnews.com-indian-cricket-news-0052

துபாய்: ஆசியக் கோப்பை தொடரின் நான்காவது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஹாங்காங் அணிகள் நேற்று பலப்பரிட்சை நடத்தின. மேலும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு இப்போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறங்கவுள்ளார். இதனையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா- கே.எல்.ராகுல் ஜோடியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் ஷர்மா 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் உட்பட 21(13) ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுமையாக விளையாடிய ராகுல் 2 சிக்ஸர்கள் உட்பட 36(39) ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

ஆனால் இவர்களைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த சூர்யகுமார் யாதவ்-விராட் கோலி ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இந்நிலையில் நிதானமாக விளையாடிய கோஹ்லி 40 பந்துகளில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 31வது அரைசதத்தை பூர்த்திசெய்தார். அவரைத்தொடர்ந்து மறுமுனையில் தொடக்கம் முதலே ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டிய சூர்யகுமார் 22 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.

குறிப்பாக கடைசி ஓவரில் மட்டும் சூர்யகுமார் யாதவ் 4 சிக்ஸர் உட்பட 26 ரன்களை விளாசினார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. இதில் சூர்யகுமார் 68(26) ரன்களுடனும், கோஹ்லி 59(44) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தனர்.

இதனையடுத்து இலங்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஷாங்காங் அணியின் தொடக்க வீரர்களான நிஸ்கத் கான் 10(12) ரன்களில் ரன் அவுட்டாகியும், யசிம் முர்டசா 9(9) ரன்கள் எடுத்தபோது ஆவேஷ் கான் பந்துவீச்சிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த பாபர் ஹயாத்-கின்ஷித் ஷா ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருப்பினும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹயாத் 41(35) ரன்கள் எடுத்தபோது ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் மறுமுனையில் கின்ஷித் ஷா 30(28) ரன்கள் எடுத்திருந்த நிலையில் புவனேஷ்வர் குமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஐஜாஸ் கான் 14(13) ரன்களின்போது ஆவேஷ்கான் பந்துவீச்சில் நடையைக்கட்டினார். இறுதியில் களமிறங்கிய ஜீஷன் அலி மற்றும் ஸ்காட் மெக்கென்னி ஆகியோர் அணியை வெற்றிபெற செய்ய கடினமாக போராடினர். இருப்பினும் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளித்து அவர்களால் ரன்களைக் குவிக்க முடியவில்லை.

இதனால் ஹாங்காங் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, சூப்பர் 4 சுற்றுக்கு இரண்டாவது அணியாக தகுதிபெற்று அசத்தியுள்ளது.

Be the first to comment on "சூர்யகுமார் யாதவின் மிரட்டலான பேட்டிங்கால், ஹாங்காங்கை வீழ்த்திய இந்திய அணி சூப்பர் 4-ல் நுழைந்தது."

Leave a comment

Your email address will not be published.


*