துபாய்: ஆசியக் கோப்பை தொடரின் 15ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. கடைசி ஓவர் வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் புதன்கிழமையான இன்று நடைபெறவிருக்கும் நான்காவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் பலப்பரிட்சை நட்ததவுள்ளன. இத்தொடரில் குரூப் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் ,ஹாங்காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. எனவே குரூப் சுற்றின் அடிப்படையில் அடுத்த போட்டியில் 2 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ள இந்தியா, ஹாங்காங் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
ஆசிய கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ,ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
அதேபோல ரவி பிஷ்னோய், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பந்துவீச்சிலும் அசத்தி வருகின்றனர். ஆனால் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், தீபக் ஹுடா ஆகியோர் கடந்த லீக் ஆட்டத்தில் சோபிக்க தவறியதால், தங்களை நிரூப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அதேசமயம் நிசாகத் கான் தலைமையிலான ஹாங்காங் அணியும் டி20 போட்டிகளில் சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக நடப்பாண்டு கேப்டன் நிசாகத் கான் 8 இன்னிங்ஸில் 249 ரன்களையும், பாபர் ஹயாத் இரண்டு அரைசதங்கள் உட்பட 217 ரன்களையும் எடுத்துள்ளனர்.
மேலும் எஸன் கான், ஐஸஸ் கான், முகமது கஸான்ஃபர் ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பான ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குமுன் நடைபெற்ற ஆசியக் கோப்பை ஒருநாள் தொடரில் இவ்விரு அணிகளும் 2008 மற்றும் 2018 என இரண்டு முறை மோதியுள்ளன.
இதில் இந்திய அணி 2008ஆம் ஆண்டு 256 ரன்கள் வித்தியாசத்திலும், 2018ஆம் ஆண்டு 26 ரன்கள் வித்தியாசத்திலும் ஹாங்காங்கை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்தமுறை இரு அணிகளும் டி20 கிரிக்கெட்டில் முதன்முறையாக நேருக்கு நேராக மோதவுள்ளதால்,இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்திய உத்தேச அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யக்குமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான். ஹாங்காங் உத்தேச அணி: நிசாகத் கான்(கேப்டன்), கிஞ்சித் ஷா, யாசிம் முர்தாசா, அய்சாஸ் கான், பாபர் ஹயாத் , எஹ்சான் கான், ஹாரூன் அர்ஷாத் ,ஸ்காட் மெக்கெக்னி, கசன்ஃபர் முகமது, ஜீஷன் அலி, ஆயுஷ் சுக்லா.
Be the first to comment on "ஆசிய கோப்பையில் ஹாங்காங்கை வீழ்த்த இந்திய அணி தயாராகவுள்ளது."