பர்மிங்காம்: 72 நாடுகள் பங்கேற்று விளையாடும் 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இந்தமுறை புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மகளிர் டி20 கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணி நேற்று பலப்பரிட்சை நடத்தின.
பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. அதன்படி பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான அலிசா ஹீலி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த பெத் மூனி-கேப்டன் மெக் லெனிங் ஜோடி முதலில் நிதானமாக விளையாடி, பின்னர் அதிரடி காட்டத் தொடங்கினர்.
இதில் மெக் லெனிங் 36(26) ரன்களில் ரன் அவுட்டாக, அடுத்து வந்த தஹிலா மெக்ராத் 2(4) ரன்களோடு நடையைக்கட்டினார். ஆனால் மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த பெத் மூனி 61(41) ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இறுதியில் களமிறங்கிய அஷ்லெக் கார்ட்னர் 25(15) ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கிரேஸ் ஹாரிஸ் 2(4), அலனா கிங் 1(5), ஜெஸ் ஜோனாசென் 1(2) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி 20. ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களைச் சேர்த்தது.
இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா 6(7) ரன்களிலும், ஷஃபாலி வர்மா 11(7) ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்-ஜெமிமா போர்ட்ரிஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது எட்டாவது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய ஜெமிமா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 33(33) ரன்களில் நடையைக்கட்டினார்.
இந்நிலையில் 65(43) ரன்கள் எடுத்த ஹர்மன்ப்ரீத் கார்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த பூஜா வஸ்திரே அடுத்த பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்நே ராணா மற்றும் ராதா யாதவ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த அணியின் நம்பிக்கை வீராங்கனையான தீப்தி வர்மாவும் 13(8) ரன்களோடு பெவிலியன் திரும்பினார். இதனால் 19.3 ஓவருக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 152 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதன்மூலம் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி காமன்வெல்த் கிரிக்கெட் தொடரில் தங்கப்பதக்கத்தையும், தோல்வியுற்ற இந்திய மகளிர் அணி வெள்ளி பதக்கத்தையும் கைப்பெற்றியது.
Be the first to comment on "ஹர்மன்ப்ரீத் அரைசதம் வீண், இந்தியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது ஆஸ்திரேலியா அணி."