லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று கைப்பற்றியது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமையான இன்றுமுதல் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடவுள்ளது.
ஆனால் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறவிருக்கும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஓவல் மைதானத்தில் நேற்று பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் வீரர்கள் விருப்பம் இருந்தால் பங்கேற்கலாம் என்ற விலக்கும் வழங்கப்பட்டது. எனவே ஃபார்மில் இல்லாத விராட் கோலி, இந்த பயிற்சி ஆட்டத்தில் கண்டிப்பாக பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. ஏனெனில் நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட்பிரிட்ஜில் நடந்த மூன்றாவது டி20 போட்டியின் போது 33 வயதான விராட் கோலிக்கு இடுப்பு பகுதியில் தசைபிடிப்பு ஏற்பட்டுள்ளது.
இது பீல்டிங்கின் போது நடந்ததா அல்லது பேட்டிங் செய்யும் போது நடந்ததா என்பதை உறுதிப்படுத்த முடியாது. எனவே இடுப்புக்கு ஓய்வு தேவைப்படுவதால் அவர் ஓவலில் நடைபெறவிருக்கும் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு குறைவு” என்று பிசிசிஐ வட்டாரம் பிடிஐயிடம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி,”வியாழன் (ஜூலை 14) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) மான்செஸ்டரில் நடைபெறவுள்ள இத்தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆட்டங்களில் கோஹ்லி இருக்கக்கூடும். எனினும், காயத்தின் அளவு இன்னும் கண்டறியப்படவில்லை. எனவே காயத்தின் அளவை மதிப்பிடுவதற்கு மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளவிருப்பதால், பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள அணி பேருந்தில் நாட்டிங்ஹாமில் இருந்து லண்டனுக்கு விராட் கோலி செல்லவில்லை’’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது. இதற்காக இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இங்கிலாந்து எதிராக நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் 31 ரன்களையும், இரண்டு டி20 போட்டியில் 12 ரன்களையும் எடுத்த விராட் கோலியை அணியை விட்டு நீக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் ஷர்மா பேசுகையில், ” கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த ஒரு வீரரை, தகுதியற்றவர் என்று ஒருசில ஆண்டுகளை மட்டும் பார்த்து கூறிவிட முடியாது.எங்கள் வீரர்களை என்ன நடந்தாலும் தொடர்ந்து நாங்கள் ஆதரிப்போம். வெளியில் என்ன பேசுகிறார்கள் என்பது முக்கியமில்லை. அணிக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் முக்கியம்” இவ்வாறு முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவு குறள் கொடுத்துள்ளார்.
Be the first to comment on "இடுப்பு வலி காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது."