சௌத்தாம்டன்: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்குமான முதல் டி20 போட்டி நேற்று சௌத்தாம்டனில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா-இஷான் கிஷான் ஜோடியில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோகித் 24(14) ரன்களிலும், 8(10) ரன்களோடு இஷானும் மொயின் அலி பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த தீபக் ஹூடா-சூர்ய்க்குமார் யாதவ் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய தீபக் 33(17) ரன்களிலும், சூர்யக்குமார் 39(19) ரன்களிலும் கிறிஸ் ஜோர்டன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறிவிட்டனர்.
ஆனால் அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 கிரிக்கெட்டின் அரைசதம் விளாசி அசத்தினார். இந்நிலையில் 17ஆவது ஓவரின்போது அக்ஸர் படேல் 17(12) ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே டாப்ளி பந்துவீச்சில் ஹர்திக் 51(33) ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இறுதியில் ஹர்ஷல் படேல் 4(5) ரன்களுக்கு ரன் அவுட்டாக, கடைசி ஓவரில் மில்ஸை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி, அடுத்த பந்தில் நடையைக்கட்டினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழந்து 198 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஜேசன் ராய் 4(16) ரன்களுடன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மிலான் 21(14) ரன்களுடனும், லிவிங்ஸ்டன் ரன் ஏதுமின்றியும் ஹர்திக் பாண்டியா வீசிய 4வது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஆனால் இதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹாரி புரூக்-மொயின் அலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் யுஸ்வேந்திர சாஹல் பந்துவீச்சில் புரூக் 28(23) ரன்களுடனும், மொயின் அலி 36(40) ரன்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். இறுதியில் டைம் மில்ஸ் 7(8),சாம் கரன் 4(4), ரீஸ் டாப்ளி 9(8), மேட் பர்கின்சன் 0(3) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கிறிஸ் ஜோர்டன் மட்டும் 26(17) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தார். இதனால் 19.3 ஓவர்கள் முடிவிலேயே இங்கிலாந்து அணி 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி 1-0 என்று கணக்கில் முன்னிலையில் உள்ளது.
Be the first to comment on "ஹர்திக் பாண்டியாவின் அசத்தலான பந்துவீச்சில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது."