டப்ளின்: அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இந்நிலையில் முதலாவது டி20 போட்டி நேற்று டப்ளினில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இருப்பினும் தொடர்ந்து மழை குறுக்கிட்டதால், தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டம் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ஆண்ட்ரியூ பால்ஃப்ரின் முதல் பந்திலேயே புவனேஷ்வர் குமாரிடம் விக்கெட்டை பறிகொடுக்க, மறுமுணையில் அதிரடியாக விளையாட முற்பட்ட பால் ஸ்ட்ரிலீங் 4(5) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவிடம் ஆட்டமிழந்தார்.
இவர்களைத் தொடர்ந்து களத்திற்கு வந்த கரெத் டெலானி 8(9) ரன்களுடன் ஆவேஷ் கான் பந்துவீச்சில் நடையைக்கட்டினார். ஆனால் இதற்கு பின்னர் அணியைக் காப்பாற்ற பார்ட்னர்ஷிப் அமைத்த ஹேரி டெக்டர்-லோர்கன் டக்கர் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இந்நிலையில் 18(16) ரன்கள் எடுத்திருந்த டக்கர், யுஸ்வேந்திரா சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹாரி டெக்டர் 29 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன்மூலம் 12 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. இதில் ஹாரி டெக்டர் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 64(33) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார்.
இதையடுத்து இலக்கை துரத்திக் கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன்-தீபக் ஹூடா ஜோடியில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 26(11) ரன்கள் எடுத்திருந்தபோது க்ரைக் யங் பந்துவீச்சில் நடையைக்கட்டினார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சூரயக்குமார் யாதவ் முதல் பந்திலேயே எல்பிடபள்யூ ஆகி ஏமாற்றமளித்தார். ஆனால் இதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த தீபக் ஹூடா-ஹரதிக் பாண்டியா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இருப்பினும் ஹர்திக் பாண்டியா 1 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 24(12) ரன்களுடன் ஜோஷூவா லிட்டில் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறமுணையில் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்த தீபக் ஹூடா 6 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 47(69) ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இதன் மூலம் 9.2 ஓவருக்கே இலக்கை எட்டிய இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
Be the first to comment on "தீபக் ஹூடா-ஹர்திக் பாண்டியா அதிரடியால் அயர்லாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி."