மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி கடந்த ஆண்டு மான்செஸ்டரில் நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இப்போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பர்மிங்காமில் வரும் ஜூலை 1-5 நாட்களில் இந்த கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து 3 டி20 போட்டிகளும், 3 ஒருநாள் போட்டிகளும் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணியில் முகமது சிராஜ் இடம் பிடித்துள்ளார். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த 15-வது ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய இவர், 15 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக இவர் வீசிய பந்துகளில் 31 சிக்சர் அடிக்கப்பட்டன.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்சர்களை வழங்கிய பௌலர் ஆனார். மேலும் குவாலிஃபையர் 2 போட்டியில் முகமது சிராஜ் பந்துவீச்சால் தான் பெங்களூரு அணி இறுதிபோட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது என்ற விமர்சனமும் இருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் முகமது சிராஜ் மீண்டும் சிறப்பாக விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : “கடந்த இரண்டு சீசன்களில் எனது கிராப் உயர்ந்துகொண்டு தான் வருகிறது. ஆனால் நடப்பு வருடம் ஐபிஎல் சீசன் எனக்கு மிகவும் மோசமானதாக அமைந்தது.இருப்பினும் நான் கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறேன். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி மீது கவனம் செலுத்தி வருகிறேன். இதற்காக வீட்டின் அருகே இருக்கும் மைதானத்தில் கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இதில் எனது திறமை மற்றும் பலமான பந்து வீசும் நுணுக்கங்களில் கவனம் செலுத்தி வருகிறேன்”.
மேலும் இங்கிலாந்தில் ‘டியூக்ஸ்’ வகை பந்து பயன்படுத்துவார்கள். ஏனெனில் இங்கிலாந்து ஆடுகளத்தில் சிறப்பாக செயல்பட இவ்வகை பந்து உதவும். எனக்கு டியூக்ஸ் பந்துவீச ரொம்ப பிடிக்கும். அதில் விளையாட ஆவலாக உள்ளேன். டி20யில் இருந்து டெஸ்ட்-க்கு மாறுவது பெரிய மாற்றம் தான்.ஏனெனில் நீண்ட நேரம் பந்துவீச வேண்டும். தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டு வருவதால் மீண்டும் டெஸ்ட் அணியில் சிறப்பாக விளையாடுவேன்.
நாங்கள் ஏற்கனவே இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இருப்பினும் இப்போட்டி எங்களுக்கு முக்கியமானது. இதில் வெல்லும் பட்சத்தில் 3-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வெல்லலாம்.எனவே இதில் முழுத்திறமையை வெளிப்படுத்தி வெற்றிக்கு உதவ முயற்சிப்பேன் “. இவ்வாறு முகமது சிராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என முகமது சிராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்."