மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பிசிசிஐ தலைவராக பதவிவகித்து வருகிறார். பிசிசிஐயின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, மேற்கு வங்க கிரிக்கெட்டை ஆளும் அமைப்பான பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புதன்கிழமையான நேற்று கிரிக்கெட்டில் தனது சர்வதேச அறிமுகத்தின் 30-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் சௌரவ் கங்குலி ட்விட் ஒன்றை பதிவிட்டார். அதில்,”1992-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கிரிக்கெட்டிலிருந்து வரும் எனக்கு இந்த 2022-ஆம் ஆண்டு வரையிலான 30 ஆண்டுகள் சிறந்த பயணமாக இருந்தது.
கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. குறிப்பாக உங்கள் அனைவரின் ஆதரவையும் பெற்றுத் தந்திருக்கிறது.எனது கிரிக்கெட் கெரியரில் ஒரு பகுதியாக இருந்து இன்று நான் இவ்வளவு பெரிய இடத்தில் இருப்பதற்கு ஆதரவாக இருந்த ஒவ்வொரு நபருக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் ஏராளமான மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் ஒரு விஷயத்தை இன்று நான் தொடக்கவிருக்கிறேன். எனது வாழ்க்கையின் இந்த அத்தியாயத்தில் நுழையும்போது அதற்கு உண்டான ஆதரவை இப்போது போல எப்போதும் நீங்கள் தாருவீர்கள் என்று நம்புகிறேன்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
கங்குலியின் இந்த ட்விட் அவர் பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார் என்பதை உறுதிசெய்தது.ஏனெனில் ஏற்கனவே பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில்(பாஜக) இணைந்ததாக முந்தைய தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அதை உறுதிசெய்யும் விதமாக சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொல்கத்தாவில் உள்ள சௌரவ் கங்குலி வீட்டிற்குச் சென்று இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டார். இதையடுத்து கங்குலி அரசியலில் ஈடுபடலாம் என யூகங்கள் எழுந்துள்ளன. மேலும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதையடுத்து கங்குலியோ அல்லது அவரது மனைவியோ மாநிலங்களவை உறுப்பினராகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த நேரத்தில் கங்குலி அரசியலில் சேர மறுத்திருந்தாலும், புதன்கிழமை கங்குலியின் ட்வீட் ஷாவுடனான இரவு சந்திப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வதந்திகளை மறுத்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலகவில்லை என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து கூக்றுகையில், “பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து திரு.சௌரவ் கங்குலி விலகுவதாக பரவி வரும் வதந்திகள் உண்மையில் தவறானவை. எங்களுக்கென சில உற்சாகமான நேரங்கள் உள்ளன. நானும் எனது சகாக்களும் வரவிருக்கும் வாய்ப்பு மற்றும் இந்திய கிரிக்கெட்டின் நலனைப் பாதுகாப்பதில் முழுமையாக கவனம் செலுத்துகிறோம்”இவ்வாறு செய்தியாளர்களிடம் ஷா தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சௌரவ் கங்குலி விலகவில்லை என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்."