ஐபிஎல் 2022: ஷிகர் தவன்- லிவிங்ஸ்டன் அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணியை வீழ்த்திய பஞ்சாப் அணி.

www.indcricketnews.com-indian-cricket-news-10014

மும்பை: ஐபிஎல் தொடரின் 48ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இந்த மைதானத்தில் இதுவரை இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் டாஸ் வென்ற குஜராத் அணி  பேட்டிங்கை தேர்வுசெய்தது.

அதன்படி களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில்-விருத்திமான் சஹா ஜோடியில் 9(6) ரன்கள் எடுத்த சுப்மன் கில் ரன் அவுட்டாகியும், மறுமுனையில் ரபாடா பந்துவீச்சில் 3 சிக்ஸர்,1 பவுண்டரி என அதிரடியாக விளையாடிய சஹா 21(17) ரன்களுடனும் அடுத்தடுத்த ஓவர்களில் நடையைக் கட்டினர்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் பொறுப்புடன் விளையாட, மறுமுனையில் ரிஷி தவான் பந்துவீச்சில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 1(7) ரன்னுடனும், லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் டேவிட் மில்லர் 11(14) ரன்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதனால் குஜராத் அணி 11.2 ஓவருக்கு 4 விக்கெட் இழந்து 67 ரன்கள் எடுத்து திணறியது.

இந்நிலையில் அணியைக் காப்பாற்ற களமிறங்கிய ராகுல் தெவாட்டியா-ரஷித் கான் ஜோடி ரபாடா வீசிய 17வது ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் தெவாட்டியா 11(13) ரன்களுடனும், ரிஷித் கான் கோல்டன் டக் அவுட்டாகியும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இதனைத்தொடர்ந்து  களமிறங்கிய சங்வான் 2(5), ஃபெர்க்யூசன் 5(3) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று அரைசதம் கடந்த சாய் சுதர்சன் 5 பவுண்டரி,1 சிக்ஸர் உட்பட 65(50) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் நின்றார். இதனால் குஜராத் அணி 20 ஓவருக்கு 8 விக்கெட் இழந்து 143 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதனையடுத்து எளிய இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜானி பேர்ஸ்டோ 1(6) ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷிகர் தவன்-ராஜபக்ஷா இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

இதில் சிறப்பாக விளையாடிய ஷிகர் தவன் அரைசதம் கடக்க, மறுமுனையில் அதேபோல அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜபக்ஷா 5 பவுண்டரி,1 சிக்ஸர் உட்பட 40(28) ரன்கள் எடுத்தபோது  ஃபெர்க்யூசன் பந்துவீச்சில் எல்பிடபள்யூ ஆகி பெவிலியன் திரும்பினார்.

இறுதியில் பார்ட்னர்ஷிப் அமைத்த லியாம் லிவிங்ஸ்டன்-ஷிகர் தவன் ஜோடி அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்றனர்.இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த லிவிங்ஸ்டன் கடைசி நேரத்தில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி 30(10) ரன்களை குவித்தார். அதேபோல தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவன் 8 பவுண்டரி,1 சிக்ஸர் உட்பட 62(53) ரன்கள் எடுத்தார்.இதனால் 16 ஓவர்கள் முடிவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்த பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: ஷிகர் தவன்- லிவிங்ஸ்டன் அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணியை வீழ்த்திய பஞ்சாப் அணி."

Leave a comment

Your email address will not be published.


*