மும்பை: ஐபிஎல் தொடரின் 41ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் ஃபின்ச் 3(7) ரன்களுடன் சஹாரியா பந்துவீச்சிலும்,வெங்கடேஷ் ஐயர் 6(12) ரன்களுடன் அக்ஸர் படேல் பந்துவீச்சிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இந்நிலையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் இந்திரஜித் 6(8) ரன்களுடனும்,சுனில் நரேன் டக் அவுட்டாகியும் குல்தீப் யாதவின் அடுத்தடுத்த பபந்துகளில் ஆட்டமிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரை 4 பவுண்டரி உட்பட 42(37) ரன்களுடனும்,அடுத்துவந்த ஆண்ட்ரே ரஸலை கோல்டன் டக் அவுட்டாகியும் குல்தீப் யாதவ் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார்.
இதனால் 14 ஓவரில் 83 ரன்களுக்கு கொல்கத்தா அணி 6 விக்கெட் இழந்தவிட்ட நிலையில், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிதிஷ் ரானா அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அவருடன் இணைந்த ரிங்கு சிங்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால் இறுதியில் முஸ்தபிசூர் ரஹமான் வீசிய கடைசி ஓவரில் ரிங்கு சிங் 23(16) ரன்களுடனும், ரிதிஷ் ரானா 3 பவுண்டரி,4 சிக்ஸர் உட்பட 57(34) ரன்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவருக்கு 9 விக்கெட் இழந்த கொல்கத்தா அணி 146 ரனகள் எடுத்தது.
இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரரான பிரித்வி ஷா, உமேஷ் யாதவ் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதன்பின் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 13(7) ரன்களுடன் ஹர்ஷித் ரானா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றுமொரு தொடக்க வீரரான டேவிட் வார்னர் 8 பவுண்டரி விளாசி 42(26) ரன்களுடன் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய லலித் யாதவ் 22(29) ரன்களுடன் சுனில் நரைன் பந்துவீச்சில் எல்பிடபள்யூ ஆகி ஆட்டமிழக்க, அடுத்துவந்த கேப்டன் ரிஷப் பந்த் 2(5) ரன்களுடன் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் வெளியேறி ஏமாற்றமளித்தார். இதனால் 11.1 ஓவரில் 84 ரன்களுக்கு டெல்லி அணி 5 விககெட் இழந்து தடுமாறியது.
இந்நிலையில் இப்போட்டியின் திருப்புமுனையாக அமைந்த ரோவ்மென் போவெல்-அக்ஸர் படேல் ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இதில் அக்ஸர் படேல் 24(17) ரன்களில் ரன் அவுட்டாக, மறுமுனையில் அதிரடியாக விளையாடி 1 பவுண்டரி,3 சிக்ஸர்களை பறக்கவிட்டு போவெல் 33(16) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார். இதனால் 19 ஓவருக்கு 6 விக்கெட் இழந்த டெல்லி அணி 150 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
Be the first to comment on "ஐபிஎல் 2022: ரோவ்மென் போவெலின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி அபார வெற்றிபெற்றது."