மும்பை: ஐபிஎல் தொடரின் 38ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
இதனையடுத்து பேட்டிங்செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணயின் தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் 18(21) ரன்களுக்கு மஹீஷ் தீக்ஷணாவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, இதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடிய பனுக்கா ராஜபக்ஷா- ஷிகர் தவன் ஜோடி 7-15 ஓவர்களில் 83 ரன்களை குவித்தனர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவன் 37 பந்துகளில் தனது 46ஆவது அரைசதத்தை பதிவுசெய்ய, மறுமுனையில் அரைசதம் விளாசவார் என எதிர்பார்க்கப்பட்ட ராஜபக்ஷா 2 பவுண்டரி,2 சிக்ஸர் உட்பட 42(32) ரன்களுடன் பிராவோ பந்துவீச்சில் நடையைக்கட்டினார்.
அதன்பின்னர் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவிங்ஸ்டோன் 1 பவுண்டரி,2 சிக்ஸர் உட்பட 19(7) ரன்களுடன் பிராவோ வீசிய 19வது ஓவரில் வெளியேற,பேர்ஸ்டோ 6(3) ரன்களில் ரன் அவுட்டானார். இதனால் 20 ஓவருக்கு பஞ்சாப் அணி 4 விக்கெட் இழந்து 187 ரன்களை குவித்தது. இதில் 9 பவுண்டரி,2 சிக்ஸர் விளாசிய ஷிகர் தவன் 88(59) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் .
இதனையடுத்து கடினமான இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரரான ராபின் உத்தப்பா 1(7) ரன்னுடன் சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதன்பின்னர் களமிறங்கிய சாண்ட்னர் 9(15) ரன்களுடன் அர்ஷ்திப் சிங் பந்துவீச்சிலும், ஷிவம் துபே 8(7) ரன்களுடன் ரிஷி தவான் பந்துவீச்சிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும், மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்த அம்பத்தி ராயுடு தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த கெய்க்வாட் 4 பவுண்டரி உட்பட 30(27) ரன்களுடன் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தார். இதனால் சிஎஸ்கே அணி 89 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த தடுமாறியது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஜடேஜா 21(16) ரன்களுடன் களத்தில் இருக்க, மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிவந்த அம்பத்தி ராயுடு 7 பவுண்டரி,6 சிக்ஸர் உட்பட 78(39) ரன்களை அடித்தபோது ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனால் கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிபெற 27 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ரிஷி தவான் வீசிய முதல் பந்தில் தோனி சிக்ஸர் அடிக்க, அடுத்த பந்தில் 12(8) ரன்களுடன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவருக்கு 6 விக்கெட் இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
Be the first to comment on "ஐபிஎல் 2022: சென்னை அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் அணி."