ஐபிஎல் 2022: டேவிட் மில்லரின் அதிரடி ஆட்டத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது குஜராத் அணி.

www.indcricketnews.com-indian-cricket-news-0057

மும்பை: ஐபிஎல் தொடரின் 29வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புனே நகரத்தின் எம்சிஏ மைதானத்தில் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி பேட்டிங்செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரரான ராபின் உத்தப்பா 3(10) ரன்களுடன் முகமது ஷமி பந்தவீச்சிலும் , அடுத்துவந்த மொயீன் அலி 1(3) ரன்னுடன் அல்ஸாரி பந்துவீச்சிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

இந்நிலையில் இந்த சீசனில் இதுவரை சோபிக்காமலிருந்த தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் நேற்றைய போட்டியில்   அம்பத்தி ராயூடுவுடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசிய அம்பத்தி ராயூடு அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோது 46(31)ரன்களில் அல்ஸாரி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த ருதுராஜ் 5 பவுண்டரி,5 சிக்ஸர் உட்பட 73(48)ரன்கள் எடுத்தபோது யஷ் தயால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் சிஎஸ்கே அணி கொஞ்சம் தடுமாறியது.

இருப்பினும் இறுதியில் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் தூபே 19(17) ரன்களுடனும், கேப்டன் ரவீந்திர ஜடேஜா 22(12) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க, சிஎஸ்கே அணி 20 ஓவருக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களைச் சேர்த்தது. 

இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேற, தொடர்ந்துவந்த அபினவ் மனோகர் 12(12)ரன்களுடன் மஹீஷ் தீக்‌ஷனா பந்துவீச்சிலும், விருத்திமான் சஹா 11(18)ரன்களுடன் ஜடேஜா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி  தடுமாறியது.

இருப்பினும், அப்போது களத்திலிருந்த  டேவிட் மில்லர்  பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 பந்துகளில் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திவேட்டியா 6(14)ரன்களுடன் பிராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்து அணிக்கு நெருக்கடியை அதிகப்படுத்தினார்.

அந்தசமயத்தில் யாரும் எதிர்பாராதவகையில் டேவிட் மில்லருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ரஷித் கான்  அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதிலும் கிறிஸ் ஜோர்டன் வீசிய 18வது ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். ஆனால் 40(21)ரன்கள் எடுத்தபோது பிராவோ பந்துவீச்சில் ரஷித் கான் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் குஜராத் அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைபட்டது . அதனை எதிர்கொண்ட டேவிட் மில்லர் 1 பவுண்டரி,1 சிக்ஸர் விளாசி அசத்தினார். இதன்மூலம் 19.5 ஓவருக்கு 7 விக்கெட்டை இழந்து 170 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மில்லர் 94(51)ரன்களுடன் களத்தில் இருந்தார்.

Be the first to comment on "ஐபிஎல் 2022: டேவிட் மில்லரின் அதிரடி ஆட்டத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது குஜராத் அணி."

Leave a comment

Your email address will not be published.


*