மும்பை: ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் மும்பையிலுள்ள பிராபோர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை – டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.மேலும் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா – இஷான் கிஷான் ஜோடி சிறப்பான அடித்தளம் அமைத்தனர்.
இருப்பினும் இந்த ஜோடி நீண்டநேரம் நீடிக்கவில்லை. ஏனெனில் 4பவுண்டரி , 2சிக்ஸர் உட்பட 41(32) ரன்களுக்கு ரோஹித்தும், அடுத்துவந்த அல்மோல்ப்ரீத் சிங் 8(9) ரன்களுக்கும் குல்தீப் யாதவின் சுழற்பந்தில் சிக்கி நடையைக்கட்டினர். இதனைதொடர்ந்து 3பவுண்டரி உட்பட 22(15) ரன்கள் எடுத்த திலக் வர்மா மற்றும் 12(8) ரன்கள் எடுத்த டிம் டேவிட் ஆகிய இருவரும் கலீல் முகமது பந்துவீச்சிலும், 3(6)ரன்கள் எடுத்த பொல்லார்ட் குல்தீப் யாதவ் பந்துவீச்சிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
மறுமுனையில் ஆட்டமிழக்காமல் இறுதிவரை விளையாடிய இஷான் கிஷான் 11பவுண்டரி, 2சிக்ஸர் உட்பட 81(48) ரன்களை எடுத்து அணியை தாங்கிப்பிடித்தார். இதனால் மும்பை அணி 20 ஓவருக்கு 5 விக்கெட் இழந்து 177 ரன்கள் சேர்த்தது. கடின இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா- டிம் செய்ஃபெர்ட் ஜோடி முதல் 3 ஓவர்களில் 30 ரன்கள் விளாசி ஆச்சரியம் கொடுத்தனர்.
ஆனால் சிறிது நேரத்தில் முருகன் அஸ்வின் வீசிய ஒரே ஓவரில் செய்ஃபெர்ட் 4 பவுண்டரி உட்பட 21(14) ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த மந்தீப் சிங் டக் அவுட்டாகி வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கி பொறுப்புடன் விளையாட வேண்டிய கேப்டன் ரிஷப் பந்த் 1(2) ரன்னுக்கு நடையைக்கட்டினார். இதன்பின்னர் நீண்டநேரம் களத்திலிருந்த பிரித்விஷா 2சிக்ஸர்,4பவுண்டரி உட்பட 38(24) ரன்கள் சேர்த்தநிலையில் பாசில் தம்பி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கி ரன்ஏதும் சேர்க்காத ரோவ்மன் போவெல் மற்றும் அதிரடியாக ஆடி 4 பவுண்டரிகள் உட்பட 22(11) ரன்கள் எடுத்த ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் பாசில் தம்பி பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் டெல்லி அணி 13.4 ஓவரில் 104 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது. இந்நிலையில் டெல்லி அணி அவ்வளவுதான் என ரசிகர்கள் நினைத்த சமயத்தில், பார்ட்னர்ஷிப் அமைத்த லலித் யாதவ் – அக்ஷர் பட்டேல் ஜோடி மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதில் அக்ஷர் பட்டேல் 2பவுண்டரி,3சிக்ஸர் உட்பட 38(17) ரன்களையும், லலித் யாதவ் 4பவுண்டரி,2சிக்ஸர் உட்பட 48(38) ரன்களையும் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால் டெல்லி அணி 18.2 ஓவரிலேயே 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது.
Be the first to comment on "ஐபிஎல் 2022: அக்சர் படேல் மற்றும் லலித் யாதவின் பிரகாசமான ஆட்டத்தால் டெல்லி கேப்பிடல்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது."