சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனியை வழிகாட்டும் படையாகக் கொண்டுள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-098

நியூ டெல்லி: ஐபிஎல் 15வது சீசனுக்கான முதல்போட்டியில் சிஎஸ்கே – கொல்கத்தா அணிகள் வரும் மார்ச் 26ஆம் தேதியன்று மோதவுள்ளன. இந்நிலையில்  ஐபிஎல்-ன் இரண்டாவது வெற்றிகரமான அணியான சிஎஸ்கே அணியின் கேப்டனான புகழ்பெற்ற மகேந்திர சிங் தோனி பதவிவிலகியதைத் தொடர்ந்து புதிய கேப்டனாக ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா  பொறுப்பேற்றுக் கொண்டார்.

சிஎஸ்கே ரசிகர்களால் தல(தலைவர்) என்று அன்புடன் அழைக்கப்படும் தோனி, ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே-காக விளையாடிவருகிறார். ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மாவையடுத்து இரண்டாவது வெற்றிகரமான கேப்டன் தோனி ஆவார். ஏனெனில் சிஎஸ்கே-வை 9 முறை ஃபைனலுக்கு அழைத்து சென்ற தோனி 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய நான்கு ஆண்டுகளில் ஐபிஎல் பட்டங்களையும்,2 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும்  வென்றுள்ளார்.

அதுமட்டுமின்றி சூதாட்டப்புகார் காரணமாக தோனி 2016 மற்றும் 2017 ஆகிய 2 சீசன்கள் மட்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடவில்லை. மேலும் சிஎஸ்கேவின்  கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட்கீப்பர் என அளப்பரிய பங்காற்றிய தோனி, 2020 சீசனை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் அணியை பிளேஆஃபிற்கு அழைத்து சென்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட 40 வயதான தோனி ஐபிஎல்-ல் மட்டும் ஆடிவரும் நிலையில், 15வது சீசனின் மெகா ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே அணியிடம் ஜடேஜாவை முதல்வீரராக தக்கவைக்க சொல்லிவிட்டு, தன்னை 2வது வீரராகவே தக்கவைக்க சொன்னார் தோனி. அதன்படி, தோனியைவிட அதிகமான தொகைக்கு(16 கோடி) ஜடேஜா தக்கவைக்கப்பட்டார்.அப்போதே, ஜடேஜா தான் அடுத்த கேப்டன் என்று ஊகிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு குறித்து சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், “தோனி ஒரு முடிவை எடுத்தால், அது அணியின் நலனுக்காக மட்டுமே இருக்கும். அவர் இப்போது மட்டுமல்ல எப்போதும் அணியை வழிகாட்டும் சக்தியாக இருப்பார்” என்றார். மேலும் இதுதான் தோனி விளையாடும் கடைசி சீசனா என்று கேட்டதற்கு,  ‘’இல்லை, தோனி இந்த சீசனோடு ஓய்வு பெற்றுவிடுவார் எனக் கூறிவிடமுடியாது. அவர் நிச்சயம் தொடர்ந்து விளையாடுவார். 

அவர்தான் சிஎஸ்கேவின் தூண். ஜடேஜாவையும் மற்ற வீரர்களையும் இவர்தான் வழிநடத்துவார். ஜடேஜாவை வளர்த்துவிடத்தான் தோனி கேப்டன் பதவியை அவரிடம் கொடுத்தார். தோனி எப்போதுமே சிஎஸ்கே மீது அக்கறை கொண்டவர். சிஎஸ்கேவின் நலன் கருதி இந்த முடிவினை எடுத்துள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஜடேஜா கேப்டனாக பதவியேற்றது குறித்து விஸ்வநாதன் கூறுகையில், “2012ஆம் ஆண்டு முதல் அணியில் இருக்கும் ஜடேஜா சிறந்த ஆல்-ரௌண்டர்.10 ஆண்டுகளாக எங்களுடன் இருக்கும் ஜடேஜாவுக்கு அணியின் கலாச்சாரம் குறித்து நன்றாகத் தெரியும் .தற்போது நல்ல ஃபார்மிலுள்ள அவர் அணியை கையாளும் திறன்கொண்டவர், தோனியின் வழிகாட்டுதலின் கீழ் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார்.” இவ்வாறு சிஎஸ்கே-வின் சிஇஓ விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனியை வழிகாட்டும் படையாகக் கொண்டுள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*