நியூ டெல்லி:2014ம் ஆண்டு முதன்முறையாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி, 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் கேப்டனாக பதவிவகித்துள்ளார்.ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலககோப்பைத் தொடருக்கு பிறகு, டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த விராட் கோலி சரியாக நான்கு மாதங்களுக்குப் பிறகு, டெஸ்ட் தொடர் கேப்டன் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கிடையே தென்னாப்பிரிக்கா தொடருக்கான ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்தும் கோஹ்லியை கிரிக்கெட் வாரியம் நீக்கியது குறிப்பிடத்தக்கது. இதைதொடர்ந்து ஒரு நாள் மற்றும் டி 20 போட்டியின் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் போட்டியின் கேப்டன் யார் என்பதை பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் இனிமேல் இந்திய அணியில் ஒரு சாதாரண கிரிக்கெட் வீரராக விளையாடவுள்ள விராட் கோலி தனது ரோல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு , “தலைவனாக இருக்க கேப்டனாக இருக்கவேண்டிய அவசியமில்லை” என்று பயர்சைட் சாட் விகே நடத்திய நிகழ்ச்சியில் பதிலளித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து விரிவாக பேசியுள்ள விராட் கோலி ,”முதலில் எதைச் சாதிக்க நினைத்தோம் அந்த இலக்குகளை அடைந்துவிட்டோமா இல்லையா என்பது குறித்து முழுமையான புரிதல் அனைவருக்கும் இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக காலம் மற்றும் நேரம் அதில் உண்டு. அதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.
ஒரு பேட்ஸ்மேனாக இருக்க பெருமைப்படுகிறேன், அணிக்கு என்னால் முடிந்த எல்லாவிதமான பங்களிப்பையும் அளிப்பேன். மேலும் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகி இந்திய அணியில் ஒரு வீரராக விளையாடியபோதும் கூட, அவர் அணியின் தலைவர் தான். அவரிடமிருந்து நாங்கள் பல ஆலோசனைகளை பெற்றுள்ளோம்.
எனவே அணியின் தலைவனாக இருப்பதற்கு கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அணி வெற்றி பெறுவது அல்லது வெற்றி அடையாமல் போவது எதுவும் நமது கைகளில் இல்லை. சிறந்து விளங்க முயற்சிப்பதும், ஒவ்வொரு நாளையும் சிறப்பாக்க முயற்சிப்பதும் குறுகிய காலத்தில் செய்யக்கூடிய ஒன்றல்ல.
அதே போல கேப்டன் பதவியை விட்டு விலகுவதும், அதை செய்வதற்கான சரியான தருணத்தை அறிந்து வைத்திருப்பதும் தலைமை பண்பின் ஒரு அங்கம் தான். ஒருவர் எந்த விதமான பாத்திரங்களாக இருந்தாலும், அதை தவற விடாமல் அந்த வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.