முன்னாள் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியின் மூன்று சாதனைகள்

www.indcricketnews.com-indian-cricket-news-051

நியூ டெல்லி: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 33 வயதான விராட் கோலி யாருமே எதிர்பார்க்காத வகையில் டெஸ்ட் தொடரின் கேப்டன் பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறினார்.

இந்தியாவின் டி20ஐ அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து சரியாக நான்கு மாதங்களுக்குப் பிறகு, டெஸ்ட் தொடர் கேப்டன் பதவியிலிருந்தும் கோஹ்லி ராஜினாமா செய்துள்ளார். இதற்கிடையே தென்னாப்பிரிக்க தொடருக்கான ஒரு நாள் கேப்டன் பதவியிலிருந்து கோஹ்லியை கிரிக்கெட் வாரியம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

இனி,அணியில் ஒரு சாதாரண வீரராக செயல்படவிருக்கும்  கோஹ்லி செய்துள்ள சாதனையை வேறு எவராலும் தொட்டு கூட பார்க்க முடியாது. ஏனெனில், கோஹ்லி நாட்டின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக மட்டுமல்லாமல், நமது நாட்டை பெருமையுடன் திரும்பிப் பார்க்கக்கூடிய பல வெற்றிகளையும் பெற்றுத்தந்துள்ளார்.

அந்நிய மண்ணில் வெற்றி: 71 ஆண்டுகளுக்குப் பிறகு, 2018-2019ஆம் ஆண்டில் கோஹ்லி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. மேலும் 2018ல்  ஜோகன்னஸ்பர்க், நாட்டிங்காம், அடிலெடு, மெல்போர்ன் ஆகிய இடங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று,ஒரே ஆண்டில் அன்னிய மண்ணில் 4 டெஸ்டில் வெற்றியைத் தேடி தந்த முதல் இந்திய கேப்டன், மேலும் செஞ்சூரியனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றியை பதிவு செய்த மூன்றாவது கேப்டன் மற்றும் முதல் ஆசிய கேப்டன் ஆவார். இந்திய டெஸ்ட் வரலாற்றிலேயே வெளிநாட்டில் நடைபெற்ற 36 போட்டிகளில் 16ல் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார்.

கேப்டனாக கோஹ்லியின் சாதனை: சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் தொடரில் வெற்றிகண்டுள்ள 4வது கேப்டன் என்ற பெருமைக்குரிய விராட் கோலி 68 டெஸ்ட் போட்டிகளில் 58.82 சராசரியுடன் 40-ல் வெற்றி ,11ல் டிரா,17ல் தோல்வி அடைந்துள்ளார். இதில் கேப்டனாக கோஹ்லி மொத்தம் 5864 ரன்கள் , 7 இரட்டை சதம், 20 சதம், 18 அரைசதம், 7 ஆட்டநாயகன் விருது, 3 தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.

இந்தியாவின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக கோஹ்லி மொத்தம் 213 போட்டிகளில் பொறுப்பேற்று 135 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார். அதில், கேப்டனாக 12 ஆயிரத்து 883 ரன்களும்,41 சதமும் விளாசியுள்ளார்.

நம்பர் 1 அணியாக மாற்றிய கோஹ்லி: விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக பதவியேற்றபோது ஐசிசி தரவரிசை பட்டியலில் 7வது இடத்திலிருந்த இந்தியா தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக  அக்டோபர் 2016 முதல் மார்ச் 2020 வரை தொடர்ந்து 42 மாதங்களுக்கு ஐசிசி தரவரிசை பட்டியலில்   நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இந்தியா முடிசூட்டப்பட்டது கோஹ்லியின் தலைமையில்தான்.

மேலும் 7 வருடங்களில் 18 தொடர்களில் வென்றுள்ள இந்திய அணி இதுவரை 4 முறை மட்டுமே டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. குறிப்பாக கோஹ்லி தலைமையில் சொந்த மண்ணில் நடைபெற்ற 11 தொடரில் எந்த டெஸ்ட் தொடரையும் இந்தியா இழந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.