புதுடெல்லி: அண்மையில் நடைபெற்ற டி20 உலக்கோப்பை தொடரில் நியூசிலாந்திடம் தோற்றுப்போன இந்தியா, மிகக் குறுகிய காலத்திலேயே, ஜெய்ப்பூரில் முதல் டி20ஐ போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டு விளையாடியது. கேப்டனாக இருந்த விராட் கோலியும், அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் இல்லாமல் இந்தியா விளையாடும் முதல் டி-20 போட்டி இதுவே. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும் இந்தியாவுக்குமான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பேட்டிங் செய்ய களமிறங்கய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேரில் மிட்செல்- மார்டின் கப்தீல் ஜோடியில் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் மிட்செலை 0 (1) க்ளீன் போல்ட் ஆக்கினார்.
இதனையடுத்து கப்தீல்-சாப்மேன் ஜோடியில் ஒருபக்கம் கப்தீல் நிதானம் காட்ட, மறுபக்கம் சாப்மேன் 63 (50) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து கிளென் பிளிப்ஸ் 0 (3) அதே ஓவரில் அஸ்வின் வீசிய சுழல் பந்தில் LBW ஆனார்.அடுத்து சாப்மேனை தொடர்ந்து அதிரடியாக ஆடிய கப்தீல் 4 சிக்ஸர் உட்பட 70(42) ரன்களை குவித்து தீபக் சஹார் பந்துவீச்சில், மிட் விக்கெட் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து செய்ஃபர்ட் 12 (11), ராசின் ரவீந்திரா 7 (8), மிட்செல் சாண்ட்னர் 4 (4) ஆகியோர் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை. இதனால், நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தனர். ரவிச்சந்திரன் அஸ்வின் 2/23 , புவனேஸ்வர் குமார் 2/24ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ராகுல் நிதானமாக ஆடி 15(14) ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாண்ட்னர் பந்தில் அவுட் ஆனார். கேப்டன் ரோகித் ஷர்மா 48 (36)ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் சூர்யகுமார் 62 (40)ரன்கள் எடுத்தார். மேலும் ஷ்ரேயாஸ் ஐயர் 5 ரன்களும் வெங்கடேஷ் ஐயர் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அக்டர் படேல் ஒரு சிங்கில் மற்றும் ஒரு ஒயிட், ரிஷப் பந்த் ஒரு பவுண்டரி என அடித்ததால் இந்திய அணி 19.4 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வெற்றிக் கொண்டது. இந்தியா -நியூசிலாந்துக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 போட்டித்தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணியில் சிறப்பாக விளையாடி, 62 (40)ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ், ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் அடுத்த போட்டி நாளை நடைபெறவுள்ளது.
Be the first to comment on "நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்றது"