துபாய்: ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 17ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று அரையிறுதி கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லுமா என்பதை நிர்ணயிக்கக்கூடிய முக்கியமான போட்டி இன்று நடைபெற்றது. குரூப் பி பிரிவில் உள்ள பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு சென்றுவிட்டது.
இந்திய அணி ரன் ரேட் காரணமாக 2வது இடத்தை பிடிக்க போராடி வந்தது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின் நேற்றைய (நவ்;7) லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் இந்திய அணி அடுத்த போட்டியில் நமீபியாவை வீழ்த்தினால், அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும் என்பதால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டு வித்தியாசத்தில் வென்று அந்த கனவை தகர்த்தது.
நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. தொடக்க வீரர்களான ஹச்ரதுல்லா (2), முகமது செஷாத் (4) என அடுத்தடுத்து வெளியேறினர். அடுத்து வந்த குர்பாஸ் (6), குல்பாதின் (15) முகமது நபி (14) ஆகியோரும் விக்கெட் இழந்து வெளியேறியதால் தொடக்கத்திலேயே சரிவை கொடுத்து ஏமாற்றத்தை அளித்தது.
இந்த அணியில் நஜிபுல்லா ஒற்றையாளாக போராடி 6 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 73(48) ரன்களை விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்தது. இதில் டிரன்ட் போல்ட் 3விக்கெட்களையும், டிம் சௌதீ 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
மேலும் 125 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி . அதிரடியாக விளையாடினால் தோல்வி ஏற்படும் என்பதால் சாதூர்யமாக நிதானத்துடன் ரன்களை சேர்த்தனர். மார்டின் கப்தில் 28(23), டாரில் மிட்செல் 17 (12), கேன் வில்லியம்சன் 40(32), டிவோன் கான்வே 36(32) என ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து 18.1 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழந்து இலக்கை அடைந்து நியூசிலாந்து அணி மூன்றாவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டது.
ஏற்கனவே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது. 2021 டி20 உலகக்கோப்பையை வென்றிடுவோம் என்ற கனவோடு இருந்த இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியுற்று இத்தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. மேலும் குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "டி20 உலகக்கோப்பை 2021: இந்திய அணியின் அரையிறுதி கனவு தகர்ந்தது."