4ஆவது டெஸ்ட்: தமிழக ஸ்பின்னர் நீக்கம்… குல்தீபுக்கு வாய்ப்பு?

Umesh Kuldeep may replace Bumrah Sundar
Umesh Kuldeep may replace Bumrah Sundar

நான்காவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கும் எனக் கருதப்படுகிறது. .

இந்தியா, இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மோடேராவில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முழுக்க முழுக்க ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தினர். குறிப்பாக, இரண்டாவது இன்னிங்ஸில் அக்ஷர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும் பந்துவீசி இந்திய அணிக்கு 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள்.

அடுத்து நான்காவது டெஸ்ட் போட்டியும் இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதிலும் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளதால் இரு அணிகளும் அதிகளவில் ஸ்பின்னர்களைக் களமிறக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ரா சொந்த காரணங்களுக்காக நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால் காயத்திலிருந்து குணமடைந்துள்ள உமேஷ் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. .

அதேபோல், வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக குல்தீப் யாதவை களமிறக்கி அவரின் திறமையைச் சோதித்துப் பார்க்கவும் அதிக வாய்ப்புள்ளது. நரேந்திர மோடி மைதானம் குறித்து இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். நேற்று பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிக்கொடுத்த அவர், “இந்திய அணி என்ன சொல்கிறதோ, அதை ஐசிசி அப்படியே செயல்படுத்தி வருகிறது. மைதானம் குறித்து ஐசிசி இன்னும் வாய் திறக்கவில்லை” எனச் சாடினார்.

இதற்கு இந்திய அணி நிர்வாகம் பதிலடி கொடுத்துள்ளது. “மைதானம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கிறது என்பதை வான் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்றாற்போல் நீங்கள் ஆடினால் மட்டுமே வெற்றிபெற முடியும். ஆனால், நீங்கள் சுழற்சி முறையில் வீரர்களைக் களமிறக்குகிறோம் என்ற பெயரில் மொயின் அலி போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தால் நாங்கள் என்ன செய்வது? சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் நீங்கள் விளையாடாமல் தொடர்ந்து மைதானத்தைக் குறைசொல்வதை ஏற்கமுடியாது. ஜோ ரூட் 5 விக்கெட்களை கைப்பற்றியது எப்படி என்பதை வான் போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 4ஆம் தேதி மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி டிரா அல்லது வெற்றிபெறும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுவிடும். இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். ஏற்கெனவே, நியூசிலாந்து அணி இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. . .

Be the first to comment on "4ஆவது டெஸ்ட்: தமிழக ஸ்பின்னர் நீக்கம்… குல்தீபுக்கு வாய்ப்பு?"

Leave a comment