2024 டி20 உலகக் கோப்பைக்கான பாதை நியூசிலாந்து தொடருடன் தொடங்குகிறது என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-100338

வெல்லிங்டன்: கடந்த வியாழக்கிழமையன்று(நவம்பர் 10) ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்து இறுதிச்சுற்றுக்கு வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.

இதனால் கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இத்தோல்வி அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வரும் நவம்பர் 18 முதல் 30 வரையிலான தேதிகளில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.

மேலும் இத்தொடரில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி , கே.எல்.ராகுல் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால், டி20 அணிக்கு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், ஒருநாள் தொடர் அணிக்கு மூத்த வீரர் ஷிகர் தவான் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் முதல் டி20 போட்டி வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “டி20 உலகக்கோப்பையில் அடைந்த தோல்வி எங்களுக்கு பெரிய ஏமாற்றமாக உள்ளது. ஆனால்  தொழில்முறை கிரிக்கெட் வீரராக நாங்கள் இருக்கும்போது அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொண்டு அதிலிருந்து மீண்டு எப்படி வெற்றியடைய வேண்டும் என்பது குறித்து தான் யோசிக்க வேண்டும் .நாங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். எனவே முன்னேறிச் செல்வது மட்டும்தான் ஒரே வழி” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “அடுத்த டி20 உலகக்கோப்பை விளையாட இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அந்த டி20 உலகக்கோப்பைக்கான பயணம் நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடங்குகிறது. இது ஒரு புதிய தொடக்கம் தான். இருப்பினும் எங்களுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது.

அதனால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அமர்ந்து பின்னர் யோசிப்போம். இப்போது எங்களுடைய வீரர்கள் அவர்களுடைய கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்பது மட்டுமே எனது விருப்பம். மேலும் அணியின் முக்கியமான வீரர்கள் இத்தொடரில் இடம்பெறவில்லை. ஆனால் அதேநேரத்தில் ஏற்கனவே நம்மிடம் திறமையான வீரர்கள், ஒன்றரை வருடங்களாக இந்தியாவுக்காக விளையாடி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த அவர்களுக்கு நல்ல வாய்ப்பும், போதுமான நேரமும் கிடைத்துள்ளது. புதிய வீரர்கள் இடம்பெற்றுள்ளதால் அணியின் உத்வேகம் மேலும் அதிகரித்துள்ளது.

இதில் அனைத்து தொடரும் மிகவும் முக்கியமானது தான். ஆகையால் எந்த சர்வதேச போட்டியும் முக்கியமானது இல்லை என்று நினைத்து நீங்கள் விளையாட முடியாது. இளம் வீரர்கள் பலருக்கு இது முக்கியமான தொடர். ஏனெனில்  இந்திய அணியில் தங்களது இடத்தை பிடிக்க இளம் வீரர்களுக்கு இத்தொடர் சரியான வாய்ப்பாக அமையும்” இவ்வாறு ஹர்திக் பாண்டியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Be the first to comment on "2024 டி20 உலகக் கோப்பைக்கான பாதை நியூசிலாந்து தொடருடன் தொடங்குகிறது என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*