2024 டி20 உலகக்கோப்பையிலும் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-10034884

நியூ டெல்லி: கடந்த புதன்கிழமையன்று (ஜூலை 05) அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக் குழு, இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20ஐ தொடருக்கான 16 பேர் கொண்ட இளம் இந்திய அணியைத் தேர்ந்தெடுத்தது. வரும் ஆகஸ்ட 3ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த டி20ஐ தொடரின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா மற்றும் முகேஷ் குமார் போன்ற பல திறமையாளர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இளம் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள அதேசமயம் யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் இடதுகை பேட்ஸ்மேனான ரிங்கு சிங் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோருக்கு இளம் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என கிரிக்கெட்டின் பல மட்டத்திலும் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி வாஷிங்டன் சுந்தர், ஷிவம் மாவி, பிருத்வி ஷா மற்றும் ஜிதேஷ் சர்மா போன்றோரும் அணியில் இடம்பெறவில்லை.

மேலும், சீனியர் வீரர்களான முன்னாள் கேப்டன் விராட் கோலி, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் டி20ஐ அணியில் தொடர்ந்து இடம்பெறாமல் இருப்பதை பார்க்கும்போது, எதிர்காலத்திற்கான டி20 அணியை வழிநடத்த ஹர்திக் பாண்டியாவை தேர்வாளர்கள் நம்பியிருப்பது உறுதியாகத் தெரிகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளரான ஆகாஷ் சோப்ரா அடுத்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில்  இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தவார் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தனது யூடியூப் சேனலில் இதுகுறித்து வீடியோ பகிர்ந்துள்ள அவர், “2022 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டதை பார்க்கும்போது, இனி வரும் காலங்களில் குறிப்பாக 2024ஆம் ஆண்டு ஆடவர் டி20 உலகக்கோப்பை வரை இந்திய டி20 அணியை ஹர்திக் பாண்டியா தான் வழிநடத்துவார் என்று தெரிகிறது.

ஏனெனில் ஏற்கனவே அந்த முடிவை நோக்கி தான் இந்திய அணி நகர்ந்ததாக நான் உணர்கிறேன். அது இன்னும் அப்படியே தான் உள்ளது எதுவும் மாறவில்லை.டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி ஆகியோர் இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதேசமயம் கே.எல்.ராகுலும் இடம்பெறவில்லை. நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பை வரை டி20 போட்டிகளில் இருவரும் ஓய்வில் இருப்பார்கள். அதன் பிறகு டி20 அணியில் அவர்களின் எதிர்காலம் குறித்து முடிவு செய்யப்படும்” இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "2024 டி20 உலகக்கோப்பையிலும் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*