2021ஆம் ஆண்டின் ஐசிசி மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக ஸ்மிரிதி மந்தனா விருது வென்றுள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-104

துபாய் : சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.அந்தவகையில் ஐ.சி.சி. 2021ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதுக்காக சிறப்பாக விளையாடும் வீராங்கனைகளின் கடைசி நான்கு பேர் பட்டியலில் இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இடம் பிடித்திருந்தார்.

மேலும் இங்கிலாந்தின் டேமி பியூமண்ட், தென் ஆப்பிரிக்காவின் லிஜேல் லீ, அயர்லாந்தின் கோபி லீவிஸ் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், 2021ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ரேச்சல் ஹெய்ஹோ பிளின்ட் டிராபியை இரண்டாவது முறையாக ஸ்மிரிதி மந்தனா வென்றுள்ளார்.

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் எலிஸ் பெர்ரிக்குப் பிறகு ஒருமுறைக்கு மேல் இந்த விருதை வென்ற இரண்டாவது பெண் வீராங்கனை மந்தனா ஆவார்.  பிற வீராங்கனைகளைப் பின்னுக்கு தள்ளி வெற்றிபெற்று கவுரவத்தை தட்டிச் சென்றுள்ளார் ஸ்மிரிதி மந்தனா.

கடந்த ஆண்டில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் மொத்தம் 22 போட்டிகளில் விளையாடிய 25 வயதான ஸ்மிரிதி மந்தனா 38.86 சராசரியில் ஒரு சதம்,5 அரைசதம் உட்பட 855 ரன்கள் விளாசியுள்ளார். கடந்த 2013 முதல் சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி வரும் மந்தனா மொத்தம் 4673 ரன்கள் எடுத்துள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஸ்மிருதி சதம் விளாசி ஆட்டநாயகிவிருதை பெற்றுள்ளார்.

மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடரில், இந்தியா சொந்த மண்ணில் 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது, இரண்டு வெற்றிகளிலும் மந்தனா முக்கிய பங்கு வகித்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிகரமாக 158 ரன்களை  துரத்தும் போது மந்தனா ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் எடுத்து, அத்தொடரை சமன் செய்ய உதவினார். மேலும் கடைசி டி20 போட்டியில் ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் எடுத்தார்.

டெஸ்ட் போட்டியிலும்  தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய மந்தனா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 78 ரன்கள் குவித்தார். இருப்பினும் அப்போட்டி டிராவில் முடிந்தது.

டாப்-ஆர்டர் பேட்டர், சுற்றுப்பயணத்தின் ஒருநாள் தொடரில் இந்தியாவின் ஒரே வெற்றியில் 49 ரன்கள் எடுத்தார். டி20ஐ தொடரில் மந்தனா 15 பந்துகளில் 29 மற்றும் அரைசதம் விளாசினார். ஆனால் இந்தியா இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை 2-1 என இழந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் நல்ல பார்மில் இருந்த மந்தனா இரண்டாவது ஒருநாள் போட்டியில் 86 ரன்கள் எடுத்தார்.மேலும் தனது இரண்டாவது டி20 அரைசதத்தை கடைசி டி20-யில் அடித்தார். இருப்பினும் தொடரை 2-0 என இழந்து இந்தியா தோல்வியடைந்தது.