17 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா

www.indcricketnews.com-indian-cricket-news-087

கொல்கத்தா: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான  3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியது. இருப்பினும் மூன்றாவது மற்றும் கடைசி டி20  போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் 4(8) ரன்களில் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷான் – ஸ்ரேயாஸ் ஐயர்   ஜோடியில் ஸ்ரேயாஸ் 4 பவுண்டரி உட்பட 25(16) ரன்கள் எடுத்து ரோஸ்டன் சேஸ் பந்துவீச்சிலும்  , இஷான் கிஷான் 5 பவுண்டரி உட்பட 34(31) ரன்கள் எடுத்து ஹெய்டன் வால்ஷ் பந்துவீச்சிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து டிரேக்ஸ் பந்துவீச்சில் நடுவரிசையில் களமிறங்கிய கேப்டன் ரோகித் ஷர்மா 7(15) ரன்களில் ஆட்டமிழந்ததால், இந்திய அணி 160 ரன்கள் தொடுவதே சிரமம் எனக் கணிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ்- வெங்கடேஷ் ஐயர் பாட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினர். 

இதில் அரைசதம் விளாசிய சூர்யக்குமார் 1 சிக்ஸர், 7 பவுண்டரி உட்பட 65(31)ரன்கள் எடுத்தபோது ஸ்டெஃபர்ட் வீசிய கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், 20 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.இதில் வெங்கடேஷ் ஐயர் 4 பவுண்டரி ,2 சிக்சர்களுடன் 35(19) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸின் தொடக்க ஆட்டக்காரர்களான கைல் மேய்ர்ஸ் 6(5) ,சாய் ஹோப் 8(4) ஆகியோர் தீபக் சஹார் பந்துவீச்சில் அடுத்தடுத்து வெளியேறினர். இதைதொடர்ந்து களமிறங்கிய நிகோலஸ் பூரன்- ரோவ்மேன் போவெல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில்

ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் போவெல் 25(14) ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பொல்லர்ட் 5(7) , ஹோல்டர் 2(6), ரோஸ்டன் சேஸ் 12(7) என சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் விளாசிய நிகோலஸ் பூரன் 61(47) ரன்னில் ஷர்தூல் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, சிறப்பாக விளையாடிய ரொமாரியோ ஸ்டெஃபர்டு 29(21) ரன்னிலும், டிரேக்ஸ் 4(3) ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இறுதியில் களமிற்கிய பேபியன் ஆலன் 5(3), ஹெய்டன் வால்ஸ் 0(3) ஆகியோர் பெரிய ஸ்கோர் எதுவும் எடுக்காததால், 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி 3-0 என தொடரை வென்றது.