தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது

www.indcricketnews.com-indian-cricket-news-100157
Shreyas Iyer of India and Sanju Samson of India during the 1st One Day International match between India and South Africa held at the Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium , Lucknow, India on the 6th October 2022 Photo by Saikat Das / Sportzpics for BCCI

லக்னோ:  இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல்போட்டி நேற்று லக்னோவிலுள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்றது.

ஆனால் மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜனனிமான் மாலன்-குயின்டன் டி காக் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் மாலன் 22(42) ரன்களுடனும், தொடர்ந்துவந்த கேப்டன் டெம்பா பவுமா 8(12) ரன்களுடனும் ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக்கட்டினர். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரரான எய்டன் மார்க்ரம், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ரன் ஏதுமின்றி க்ளின போல்டாகி ஆட்டமிழக்க, மறுமுனையில் டி காக் 48(54) ரன்களுடன் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் எல்பிடபள்யூ ஆகி நடையைக்கட்டினார். 

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹென்ரிச் கிளாசென்-டேவிட் மில்லர் ஜோடி அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினர். இதில் கிளாசென் 74(65) ரன்களுடனும், மில்லர் 75(63) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர்.

இதனால் தென்னாப்பிரிக்கா அணி 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்களை குவித்தது. இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில் 3(7) மற்றும் கேப்டன் ஷிகர் தவான் 4(16) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களோடு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

தொடர்ந்து வந்த ருதுராஜ் கெய்க்வாட் 19(42) மற்றும் இஷான் கிஷன் 20(37) ஆகியோரும் பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பியதால், இந்திய அணி 17.4 ஓவரிலேயே 4 விக்கெட்டு இழந்து வெறும் 51 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்ரேயாஸ் ஐயர்-சஞ்சு சாம்சன் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த நிலையில்,  தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் 50(37) ரன்களோடு லுங்கி நெகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன்-ஷர்துல் தாகூர் இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இதில் அருமையாக விளையாடிய ஷர்துல் 33(31) ரன்கள் எடுத்திருந்தபோது லுங்கி நெகிடி பந்துவீச்சால் முக்கியமான கட்டத்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, இந்திய அணியின் வெற்றி சதவிகிதமும் குறைந்தது. அதன்பின் குல்தீப் யாதவ் 0(1), ஆவேஷ் கான் 3(6) ஆகியோரும் வந்த வேகத்தில் நடையைக்கட்டினர். இறுதியாக கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிபெற 30 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த ஓவரை எதிர்கொண்ட சாம்சனால் வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.  

இதனால் 40 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டு இழப்பிற்கு 240 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் சாம்சன் 3 சிக்சர், 9 பவுண்டரி உட்பட 86(63) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார். இதன்மூலம் இந்திய அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Be the first to comment on "தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது"

Leave a comment

Your email address will not be published.


*