டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு பிடித்த விராட் கோலியின் சதம் – ரோஹித் சர்மா

www.indcricketnews.com-indian-cricket-news-027

மொஹாலி: இந்தியா – இலங்கை இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்றுமுதல் மொஹாலி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இப்போட்டி கோஹ்லியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.அதேபோல இலங்கைக்கும் இது 300வது டெஸ்ட் போட்டி என்பதால்,  இருநாட்டு ரசிகர்களுக்குமிடையே இப்போட்டி  மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. மேலும் இதற்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், விராட் கோலியின் 100வது டெஸ்ட் மற்றும் அவருடைய சிறந்த டெஸ்ட் சதம் பற்றி  இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,

“ கோஹ்லியின் இந்த டெஸ்ட் பயணம் மகத்தானது. அவர் கேப்டனாக இருந்த காலத்தில் , அணியில் பல மாற்றங்களை ஏற்படுத்தி சிறந்த முறையில் வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார். அவருடைய பதவிக்காலத்தில் தான் இந்திய டெஸ்ட் அணி நல்ல முன்னேற்றத்தை கண்டது . கடந்த 5, 6 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்ததற்கு கோஹ்லி தான் முதன்மை காரணம். எனவே இந்தியா சாதித்ததற்கான புகழ் அனைத்தும் கோஹ்லிக்கே உரித்தானது.”எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ” கோஹ்லியின் 100வது டெஸ்ட் போட்டியைக் காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது நல்ல விசயம்.இது கோஹ்லிக்கும், அணிக்கும் நல்ல உத்வேகத்தை கொடுக்கும். நாங்கள் வெற்றிக்காக எங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குவோம்.

மேலும் கோஹ்லியின் சிறந்த இன்னிங்ஸ் எது என்று கேட்டால், என்னைப் பொறுத்தவரை 2013ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள  ஜோஹன்ஸ்பர்க்கில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அவர் அடித்த சதம் தான் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும். ஏனெனில் முதன்முறையாக சீனியர்கள் இல்லாமல், கடினமான ஆடுகளத்தில் விளையாடினோம். தென்னாப்பிரிக்காவில் பலரும் அப்போதுதான் முதன்முதலாக விளையாடுகிறோம். அங்கு டேல் ஸ்டெயின், மார்னே மார்கல், பிளாண்டர், காலிஸ்  ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடுவது அவ்வளவு எளிதானதல்ல. இருப்பினும்  கோஹ்லி முதல் இன்னிங்ஸில் சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் 96 ரன்களும் அடித்தார். எனக்குத் தெரிந்து  தென்னாப்பிரிக்காவில் அவர் அடித்த சதம் தான் சிறந்தது.

அதனால்தான் அன்று அவர் அடித்த சதம் என் மனதில் நீங்கா இடம் பிடித்தள்ளது. ” என்று கோஹ்லியின் பயணம் குறித்து பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

மேலும், “டெஸ்ட் கேப்டனாக  கோஹ்லி சாதித்ததில் மறக்க முடியாதது எது என்று கேட்டால்,2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை  கோஹ்லியின் கேப்டன்ஸியில் கைப்பற்றியது தான் .ஏனெனில் எந்தவொரு அணியும் அங்கு செய்யாத சாதனையை நாங்கள் செய்து காட்டினோம். குறிப்பாக கோஹ்லியின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஸி  பிரமிக்கவைக்கும் வகையில் அமைந்தது. எனவே 100வது டெஸ்ட் போட்டியானது அவருக்கு சிறந்த வகையில் அமையும் என நம்புகிறேன்.” இவ்வாறு ரோகித் ஷர்மா தெரிவித்தார்.