சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து மகேந்திரசிங் தோனி ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டை சாதனையின் உச்சத்துக்கு அழைத்து சென்ற கேப்டன்களில் ஒருவர், மகேந்திர சிங் டோனி. கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ஒரு வீரராக அணியில் நீடித்தார். அதிரடியாக ஆடுவதில் வல்லவரான டோனியின் ஆட்டத்திறன் சமீப காலமாக வெகுவாக தளர்ந்தது. ஆனாலும் விக்கெட் கீப்பிங்கில் தன்னை மிஞ்ச யாருமில்லை என்று கூறும் அளவுக்கு மிகச்சிறப்பாக செயல்பட்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. தனது எதிர்கால திட்டம் குறித்து வாய்திறக்காமல் மவுனம் காத்து வந்தார். அவர் ஐ.பி.எல். போட்டியில் ரன் குவித்து, அதன் மூலம் இந்திய அணிக்குள் மறுபிரவேசம் செய்வார் என்று நிறைய கணிப்புகள் உலா வந்தன.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னையில் இருந்தபடி அதிரடியாக அறிவித்தார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவர் தன் மீது அன்பு காட்டி ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். 2014-ம் ஆண்டின் இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனி இப்போது சர்வதேச ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கும் முழுக்கு போட்டுள்ளார். கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இப்போதைக்கு இந்தியாவில் எந்த சர்வதேச போட்டிகளும் நடக்க வாய்ப்பில்லை.

ஆனாலும் அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாட திட்டமிட்டு உள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 39 வயதான டோனி 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார்.

தனது அதிரடியான பேட்டிங் மூலம் ரசிகர்களை கவர்ந்த டோனி சில ஆண்டுகளிலேயே இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார். அவரது தலைமையில் இந்திய அணி 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையையும், 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் கோப்பையையும் உச்சிமுகர்ந்தது. இந்த மூன்று கோப்பைகளையும் வென்றுத்தந்த ஒரே கேப்டன் டோனி தான். இலங்கைக்கு எதிரான 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 91 ரன்கள் திரட்டி ஆட்டநாயகனாக ஜொலித்தது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முத்தாய்ப்பாக அமைந்தது.

Be the first to comment on "சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து மகேந்திரசிங் தோனி ஓய்வு"

Leave a comment

Your email address will not be published.


*