ஐபிஎல் 2022: டேவிட் வார்னர்-மிட்செல் மார்ஷ் கூட்டணியால் ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி பெற்றது.

www.indcricketnews.com-indian-cricket-news-10038

மும்பை: ஐபிஎல் தொடரின் 58ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஏனெனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் வெறும் 7(11) ரன்களுக்கு சேத்தன் சகார்யா பந்துவீச்சில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 19(19) ரன்களுக்கு மிட்செல் மார்ஷிடம் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றமளித்தார். இதனால் ராஜஸ்தான் அணி 8.1 ஓவருக்கு 2 விக்கெட் இழந்து 54 ரன்கள் எடுத்து திணறியது.

இதனைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த ரவிச்சந்திரன் அஸ்வின்-தேவ்தத் படிக்கல் ஜோடி இணைந்து அதிரடியாக விளையாடி 53 ரன்களை குவித்தனர். இதில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் டி20 கிரிக்கெட் போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதிவுசெய்தார்.

இருப்பினும் மிட்செல் மார்ஷ் வீசிய 15ஆவது ஓவரில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 6(4) ரன்களுடன் ஆன்ரிச் நோர்ஜே பந்துவீச்சிலும், அடுத்தவந்த ரியான் பராக் 9(5) ரன்களுடன் சேத்தன் சகார்யா பந்துவீச்சிலும் அடுத்தடுத்த ஓவர்களில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இந்நிலையில் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த தேவ்தத் படிக்கல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது 6 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 48(30) ரன்களுடன் ஆன்ரிச் நோர்ஜே பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவருக்கு 6 விக்கெட் இழந்து 160 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் அணியின் தொடக்க வீரரான ஸ்ரீகர் பரத் ஓவரின் இரண்டாவது பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் வார்னர்-மிட்செல் மார்ஷ் ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடி 5 பவுண்டரி,7 சிக்ஸர் விளாசி அரைசதம் கடந்த மிட்செல் மார்ஷ் 89(62) ரன்கள் எடுத்திருந்த நிலையில் யுஜ்வேந்திர சாஹல் பந்துவீச்சில் வெளியேறினார்.

ஆனால் மறுமுணையில் நிதானமாக விளையாடிய டேவிட் வார்னர் 5 பவுண்டரி, 1 சிக்ஸர்  உட்பட 52(41) ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருக்க, தொடர்ந்து வந்த கேப்டன் ரிஷப் பந்த் தனது பங்கிற்கு 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் 18.1 ஓவர் முடிவிலேயே 2 விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை எட்டிய டெல்லி அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: டேவிட் வார்னர்-மிட்செல் மார்ஷ் கூட்டணியால் ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி பெற்றது."

Leave a comment

Your email address will not be published.


*