​பவுன்சருக்கு நாங்கதான் அடையாளம்: பேச்சிலேயே மிரட்டும் ஹேசில்வுட்!

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் குறித்து ஹேசில்வுட் பேசினார்.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலிய பௌலர்கள் பவுன்சர் பந்துகளை அதிகம் பயன்படுத்தி விக்கெட்களை வீழ்த்த முயற்சிப்பார்கள் என வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்தார். முதல் டெஸ்ட் (பகலிரவு) போட்டி வருகிற 17ஆம் தேதி துவங்க உள்ளது.

இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஹேசில்வுட், “பல நேரங்களில் பவுன்சர் பந்துகள் தந்திரமான முறையில் பயன்படுத்தப்பட்டு விக்கெட்கள் வீழ்த்தப்படுகின்றன. இது விளையாட்டின் ஒரு பகுதியாகும். மற்ற நாடுகளை விட இங்குதான் (ஆஸ்திரேலியாவில்) பவுன்சர்கள் அதிகம் வீசப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

“டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களை சாதாரணமாக வீழ்த்த முடியது. பவுன்சர்களை பயன்படுத்தி லெக் திசையில் பீல்டர்களை நிறுத்தினால் விக்கெட்டை விரைந்து வீழ்த்த முடியும். இரண்டு அணிகளும் இதை முயற்சிக்கும்” என்றார்.

விராட் கோலி முதல் டெஸ்ட் முடிந்தவுடன், தனது மனைவியின் பிரசவத்தின்போது அருகில் இருப்பதற்காக நாடு திரும்புகிறார். இதுகுறித்தும், நான்கு முறை (ஒருநாள் தொடரில் 3 முறை, டி20 தொடரில் முதல் போட்டியில்) அவரின் விக்கெட்டை வீழ்த்தியது குறித்தும் பேசினார்.

“விராட் கோலியை அதிகமுறை வீழ்த்தியது அதிர்ஷ்டம்தான். டெஸ்ட் தொடரில் இது தொடரும் என நம்புகிறேன். டெஸ்ட் முற்றிலும் மாறுபட்டது. கடந்தகாலத்தில் அவர் எங்களுக்கு எதிராக அதிக ரன்களை குவித்திருக்கிறார். அவரை வீழ்த்த இரண்டு இன்னிங்ஸ் மட்டும்தான் உள்ளது. சரியாகப் பயன்படுத்த முயற்சிப்பேன்” எனத் தெரிவித்தார்.

2018-19ஆம் ஆண்டு இந்திய அணி, ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்டு முதல்முறையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. அப்போது, புஜாரா சிறப்பாக விளையாடி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்த தொடரிலும் அதைத் தொடர அனுமதிப்பீர்களா எனக் கேள்வி கேட்கப்பட்டது.

“கடந்த தொடரில் புஜாரா அதிக பந்துகளை எதிர்கொண்டார். இதனால், எங்களுக்கு சரியாக ஓய்வு கிடைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை எதிர்கொள்வதுதான் சிறந்த பேட்ஸ்மேனுக்கு அழகு. கடந்தகால தவறு எங்களுக்கு நல்ல பாடமாக அமைந்திருக்கிறது. இதனால், மீண்டும் தவறுகள் செய்ய வாய்ப்பில்லை” எனக் கூறினார்.

மிட்செல் ஸ்டார்க் அணிக்குத் திரும்பியிருப்பது குறித்தும் ஹேசில்வுட் பேசினார். “ஸ்டார்க் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி. எல்லோருக்கும் தெரியும், அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு எவ்வளவு முக்கியம் என்று. பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை கைப்பற்றியவர். அவர் மீண்டும் தனது அதிரடி வேட்டையைத் தொடர்வார்” என நம்பிக்கை தெரிவித்தார்.

Be the first to comment on "​பவுன்சருக்கு நாங்கதான் அடையாளம்: பேச்சிலேயே மிரட்டும் ஹேசில்வுட்!"

Leave a comment

Your email address will not be published.