ஸ்மிருதி மந்தனா, டைட்டஸ் சாது ஆகியோரின் அதிரடியால் இந்திய மகளிர் அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-100348933

ஹாங்சோ: சீனாவில் 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹாங்சோ பிங்ஃபெங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா -ஷஃபாலி வர்மா ஜோடியில் ஸ்மிருதி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் ஷஃபாலி 9(15) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ஆனால் அதன்பின் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதேசமயம் மறுமுனையில் ஸ்மிருதி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோது 46(45) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் 9(6), கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 2(5), பூஜா வஸ்திரேகர் 2(4), அமஞ்ஜோத் கவுர் 1(2) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு வெளியேற, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெமிமா 42(40) ரன்களுடன் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இலங்கை அணி தரப்பில் இனோகா ரனவீரா, உதேசிகா பிரபோதனி,சுகந்திகா குமாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீராங்கனையான அனுஷ்கா சஞ்சீவனி 1(5) ரன்னிலும், அடுத்து வந்த விஷ்மி குனரத்னே ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, மறுமுனையில் கேப்டன் சமாரி அத்தபத்துவும் 12(12) ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த ஹாசினி பெரேரா- நிலாக்சி டி சில்வா ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் ஹாசினி 25(22) ரன்களுக்கும், டி சில்வா 23(34) ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஒஷாதி ரனசிங்கா 19(26) ரன்களிலும், கவிஷ தில்ஹாரி 5(8) ரன்களிலும், சுகந்திகா குமாரி 5(8) ரன்களிலும் என அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்தது.  

இந்திய மகளிர் அணி தரப்பில் அறிமுக வீராங்கனையான டைட்டஸ் சாது 3 விக்கெட்டுகளையும், ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டுகளையும், தேவிகா வைத்யா, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் இந்திய மகளிர் அணி 19 ரன்கள் வித்தியாத்சத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு ஆசிய கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளது. இப்போட்டியில் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி வெள்ளிப்பதக்கத்தை உறுதிசெய்தது.   

Be the first to comment on "ஸ்மிருதி மந்தனா, டைட்டஸ் சாது ஆகியோரின் அதிரடியால் இந்திய மகளிர் அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளது."

Leave a comment

Your email address will not be published.


*