ஸ்மித் மிரட்டல் சதம்: தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி!

சிட்னியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச் சிறப்பான துவக்கம் தந்தனர். 100 ரன்களை கடந்த இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க இந்திய பௌலர்கள் கடும் முயற்சி மேற்கொண்டர். ஒருவழியாக முகமது ஷமி வீசிய 22ஆவது ஓவரில் ஆரோன் ஃபிஞ்ச் 60 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 77 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசி 83 ரன்கள் சேர்த்தார். அடுத்துக் களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் முதல் போட்டியைப் போலவே இப்போட்டியில் 62 பந்துகளில் சதம் கடந்து, மொத்தம் 64 பந்துகளில் 14 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசி 104 ரன்கள் குவித்தார். இந்திய அணிக்கு எதிராக ஸ்மித் அடித்த தொடர்ச்சியான மூன்றாவது ஒருநாள் சதம் இதுவாகும். இதுவரை நான்கு பேர் மட்டுமே இந்த சாதனையைச் செய்துள்ளனர்.

இறுதியில் மார்னஸ் லபுஷேன் 70 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 63 ரன்களும் சேர்த்தனர். முதல் 5 பேட்ஸ்மேன்களும் அரை சதம் கடந்ததால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 389 ரன்களை குவித்தது.

இந்திய அணி 978 ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை ஓபனிங் பேட்ஸ்மேன்ளை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைக்கவிட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக ஒருமுறையும், அதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இருமுறையும் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

390 ரன்கள் மெகா இலக்கைக் நோக்கி களமிறங்கிய இந்திய அணி ஓரளவுக்குச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர் மயங்க் அகர்வால் 28 ரன்களும், ஷிகர் தவன் 30 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் விளையாடி 87 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்து 89 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். ஷ்ரேயஸ் ஐயர் 38 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி 66 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் அடித்து அவுட் ஆனார்.

அடுத்துக் கமறிங்கிய ஷார்திக் பாண்டியா (28), ரவிந்திர ஜடேஜா (24) அதிரடி காட்டவில்லை. இதனால், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 338 ரன்கள் மட்டும் சேர்த்து 0-2 எனத் தொடரை இழந்தது. மூன்றாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 2ஆம் தேதி கான்பெராவில் நடைபெறவுள்ளது.

Be the first to comment on "ஸ்மித் மிரட்டல் சதம்: தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி!"

Leave a comment

Your email address will not be published.