விருத்திமான் சாஹா நேர்மைக்கும் தெளிவுக்கும் தகுதியானவர் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-094

கொல்கத்தா: இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 24ஆம் தேதியிலிருந்தும் ,2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மார்ச் 4ஆம் தேதியிலிருந்தும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா நீக்கப்பட்டுள்ளார்.

இதனால் ஏமாற்றம் அடைந்துள்ள சாஹா,பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், “தென்னாப்பிரிக்க தொடர் முடிந்து நாடு திரும்பியபோது, இனி இந்திய அணியில் உனது பெயரை பரிசீலிக்கமாட்டோம் என அணி நிர்வாகமும் ,தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மாவும் வெளிப்படையாகத் தெரிவித்தனர்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேரடியாக என்னிடம் வந்து, இனி அணியில் இடம் கிடைக்காது. ஓய்வு எடுப்பது குறித்து இனியாவது சிந்திப்பதே நல்லது எனக்கூறிவிட்டு சென்றார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானேன்.  இத்தனை நாள் அணியின் ஒரு அங்கமாக இருந்ததால், இதனை வெளிப்படையாக சொல்லவில்லை” எனத் தெரிவித்தார்.

இந்த பேட்டி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி டி20 தொடரில் 3-0 என இந்திய அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து , செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமை பயிற்ச்சியாளரான ராகுல் டிராவிட்டிடம் ரித்திமான் சாஹாவின் பரபரப்பான குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

இதுகுறித்து  விளக்கமளித்த அவர்,‘‘இந்த ஆண்டில் மொத்தமாக 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடவிருக்கிறோம். ரிஷப் பந்த் முதன்மை விக்கெட் கீப்பராக தற்போது திகழ்ந்து வருகிறார்.  அவருக்கு அடுத்தபடியாக இளம் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் போன்றோரை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே இளம்வீரர் ஒருவரை வளர்க்க வேண்டும் என்ற ஒன்றுதான் காரணமே தவிர,  ரித்திமான் சாஹா மீதும், அவர் இந்திய அணிக்கு அளித்த பங்களிப்பு மீதும் எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. 

அந்த மதிப்பு தான்,அவருடனான எனது உரையாடலுக்கே காரணம். அவர் நேர்மைக்கும் தெளிவுக்கும் தகுதியானவர். அதனால்தான் அவர் டெஸ்ட் அணியில் இடம்பெறாததை மீடியா மூலம் தெரிந்துகொள்ளாமல், ஏன் அணியில் இடம்பெறவில்லை என்கின்ற நேர்மையான காரணத்தையும், அதுகுறித்த தெளிவையும் நேரடியாக என் மூலம் பெறவேண்டும் என்று விரும்பியதால் தான் அந்த உரையாடலே நடந்தது. 

இந்த மாதிரியான உரையாடல்கள் ஆடும் லெவனில் இடம்பெறாமல் போகும்  ஒவ்வொரு வீரருடனும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அவர்கள் ஏன் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை, மற்றவர்கள் எப்படி இடம்பிடித்தார்கள் என்ற காரணத்தையும் தெளிவாக எடுத்துரைக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது.

 நான் சொல்லும் அனைத்தையும் அப்படியே வீரர்கள் ஏற்றுக்கொண்டு அதற்கு உடன்பட வேண்டும் என எதிர்பார்ப்பது கிடையாது. அது சரியாக வராது. எனவே, நான் உண்மையிலேயே அவரது கருத்தால் காயப்படவில்லை.’’இவ்வாறு ராகுல் டிராவிட் தெரிவித்தார்.