விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியைக் காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

www.indcricketnews.com-indian-cricket-news-0121

மொஹாலி: இந்தியா-இலங்கைக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4ஆம் தேதி முதல் மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் துவங்கவுள்ளது. மேலும் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி விளையாடும் இந்த முதல் டெஸ்ட் போட்டியானது, இந்திய அணியின் மேட்ச் வின்னர் மற்றும்  தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டியாகும்.இதுவரை 99 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 சதங்கள் அடித்துள்ள அவர், மொத்தம் 7962 ரன்களை குவித்துள்ளார்.

இந்நிலையில் இப்போட்டியை காண 50% வீதமான ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிசிஏ பொருளாளர் ஆர்பி சிங்லா இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து கூறுகையில், “விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி என்பதால், இப்போட்டியை காண 50% ரசிகர்களை அனுமதிப்பது குறித்து பிசிசிஐயிடம் இருந்து தகவல் கிடைத்தது.

இதனையடு்த்து மைதானத்தில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் கூட்டம் அதிகரிக்கும் காரணத்தால், புதன்கிழமையான இன்று முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனைக்கு அனுமதிப்போம். மேலும் விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டியை பார்க்க ரசிகர்கள் ஏராளமாக இருப்பார்கள் என்பதால், கோவிட்-19 நெறிமுறைகளை பின்பற்றப்படுவதை குறித்து பிசிஏ உறுதி செய்யும்,” என்று பிசிஏ பொருளாளர் ஆர்பி சிங்லா கூறினார்.

இதைத்தொடர்ந்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில்,”விராட் கோலியின் வரலாற்று சிறப்புமிக்க இந்த 100வது டெஸ்ட் போட்டியை காண  50%  ரசிகர்களாவது அனுமதிக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்த நிலையில்,  இந்த டெஸ்ட் போட்டியைக் காண 50%  ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே மூடிய கதவுகளுக்குப் பின்னால் இப்போட்டி நடைபெறாது”. என்று தெரிவித்தார்.

மேலும் “தற்போதைய சூழ்நிலையில், பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு,பார்வையாளர்களை மைதானத்திற்குள் அனுமதிப்பது என்பது குறித்து,மாநில கிரிக்கெட் சங்கங்களால் எடுக்கப்பட்ட முடிவு. எனவே நான் பிசிஏ அலுவலகப் பணியாளர்களுடன் பேசினேன். விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியை விளையாடும் வரலாற்றுத் தருணத்தை கிரிக்கெட் ரசிகர்கள் கண்டுகளிக்க முடியும் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்” என்று ஜெய் ஷா தெரிவித்தார்.

மேலும் ,”விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியை காண நானும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்கள் சாம்பியன் கிரிக்கெட் வீரரான கோஹ்லி சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். ரசிகர்கள் கோஹ்லியின் விளையாட்டை ரசிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அவர் இன்னும் பல போட்டிகளில் விளையாடி நாட்டைப் பெருமை படுத்த வேண்டும்,” இவ்வாறு ஜெய் ஷா தெரிவித்தார்.