மிர்பூர்: இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று மிர்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா-ஷிகர் தவான் ஜோடியில் மெஹிடி ஹசன் பந்துவீச்சில் தவான் 7(17) ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனைத்தொடர்ந்து ஆட்டத்தில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத ரோஹித் 27(31) ரன்களுடனும், அடுத்துவந்த விராட் கோலி பந்தை சரியான டைமிங் செய்யாததால் 9(15) ரன்களுடனும் ஷாகிப் அல் ஹசன் வீசிய ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தனர்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் 24(39) ரன்களுடன் எபாடட் ஹுசைன் பந்துவீச்சில் ஆடட்மிழக்க, தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோது 19(43) ரன்களில் ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சில் நடையைக்கட்டினார்.
இறுதியில் ஷபாஸ் அஹ்மத் 0(4) ,முகமது சிராஜ் 9(20), ஷர்தூல் தாக்கூர் 2(3), தீபக் சஹார் 0(3) ஆகியோர் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, மறுபுறம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த கே.எல்.ராகுல் 73(70) ரன்களோடு எபாடட் ஹுசைன் பந்துவீச்சில் நடையைக்கட்டினார்.
இதனால் இந்திய அணி 41.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய வங்கதேச அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அந்த அணியின் நட்சத்திர தொடக்க வீரரான நஜ்முல் ஹூசைன் சாண்டே, தீபக் சஹார் வீசிய முதல் பந்திலேயே பெவியனுக்கு திரும்ப, அடுத்துவந்த அனமுல் ஹக் 14(29) ரன்களில் முகமது சிராஜிடம் விக்கெட்டை இழந்தார்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த லிட்டன் தாஸ்-ஷாகிப் அல் ஹசன் ஜோடி ஓரளவுக்கு ரன்களை குவித்தனர். இருப்பினும் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஷாகிப் 29(38) ரன்களிலும், அரைசதம் அடிப்பார் என் எதிர்பார்க்கப்பட்ட தாஸ் 41(63) ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய முஷ்பிக்கூர் ரஹிம் 18(45), மஹ்முதுல்லா 14(35), அஃபிஃப் ஹொசைன் 6(12), எபோடட் 0(3) ஹொசைன், ஹசன் மஹ்முத் 0(2) ஆகியோர் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், இந்திய அணி எளிதாக வெற்றிபெறும் என்ற எதிபார்ப்பு நிலவியது. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த மெஹிதி ஹசன்-முஸ்தபிசூர் ரஹ்மான் ஜோடி அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர்களை விளாசி ஆட்டத்தின் பரபரப்பை கூட்டினர்.
இறுதியில் 45.5 ஓவர்களில் வங்கதேச அணி இலக்கை எட்டியதுடன் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதில் மெஹதி ஹசன் 38(39) ரன்களுடனும், முஷ்தபிசூர் ரஹ்மான் 10(11) ரன்னுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்து அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர்.
Be the first to comment on "வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 0-1 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது."