லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்.

www.indcricketnews.com-indian-cricket-news-1001197
Naveen Ul Haq of Lucknow Super Giants celebrates the wicket of Abhishek Porel of Delhi Capitals during match 64 of the Indian Premier League season 17 (IPL 2024) between Delhi Capitals and Lucknow Super Giants held at the Arun Jaitley Stadium, Delhi on the 14th May 2024. Photo by Deepak Malik / Sportzpics for IPL

டெல்லி: இந்தியாவில் நடைபெற்றுவரும் 17ஆவது ஐபிஎல் தொடரின் 64ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் -அபிஷேக் போரல் ஜோடியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேக் ஃபிரேசர் அர்ஷத் கான் வீசிய முதல் ஓவரிலேயே ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஆனால் அதன்பின் அபிஷேக் போரலுடன் ஜோடி சேர்ந்த ஷாய் ஹோப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அதன்பின் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், 38(27) ரன்களுடன் ஷாய் ஹோப் ரவி பிஷ்னோய் பந்துவச்சில் ஆட்டமிழந்தார்.

அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த போரல், 58(38) ரன்கள் எடுத்திருந்தபோது நவீன் உல் ஹக் பந்துவீச்சில் வெளியேறினார். இவர்களைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த ரிஷப் பந்த்- டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடிவந்த நிலையில், 33(23) ரன்களை எடுத்திருந்த ரிஷப் பந்த் நவீன் உல் ஹக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த ஸ்டப்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்து  57(25) ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய அக்ஸர் படேல் 14(10) ரன்களையும் சேர்த்தனர்.

இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் கே.எல்.ராகுல் 5(3) ரன்களிலும், குயிண்டன் டி காக் 12(8) ரன்களிலும் என அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய  மார்கஸ் ஸ்டொய்னிஸ் 5(7) ரன்களிலும், தீபக் ஹூடா ரன்கள் ஏதுமின்றியும், ஆயூஷ் பதோனி 6(9) ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் 5ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் முதல் பந்திலிருந்தே சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசி 20 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.

இருப்பினும் 61(27) ரன்கள் எடுத்திருந்த பூரன் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து குர்னால் பாண்டியாவும் 18(18) ரன்களுக்கு வெளியேறினார். ஆனால் அதன்பின் களமிறங்கிய அர்ஷத் கான் சிக்ஸர்களை பறக்கவிட,மறுபுறம் இப்போட்டியில் வாய்ப்பு பெற்ற யுத்விர் சிங்கும் தனது பங்கிற்கு14(7) ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனாலும் தனது அதிரடியைக் கைவிடாத அர்ஷத் கான் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். 

இறுதியில் லக்னோ அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த அணியால் 3 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் இறுதிவரை போராடிய அர்ஷத் கான் 58(33) ரன்களைச் சேர்த்தார்.

டெல்லி அணியின் அபார பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளையும், கலீல் அஹ்மத், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், அக்ஸர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்.

Be the first to comment on "லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்."

Leave a comment

Your email address will not be published.


*