இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் மழையால் போட்டி பாதியில் தடைபட்டது.
விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கிய முதல்நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா சதத்தால் இந்தியா விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்துள்ளது.
எனினும், மழை வரும் முன்னே ரன் மழை பொழிந்து தெறிக்க விட்டார் இந்திய அணியின் துவக்க வீரராக முதன் முறையாக களமிறங்கிய ரோஹித் சர்மா.
மற்றொரு துவக்க வீரர் மாயங்க் அகர்வாலும் அரைசதம் அடித்து தெறிக்கவிட்டார். தென்னாப்பிரிக்க அணி இவர்களை வீழ்த்த முடியாமல் திணறியது
இந்தப் போட்டியில் முதல் நாள் தவிர்த்து மற்ற நாட்களில் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கருதப்பட்டது. அதனால் முதல் நாள் பேட்டிங் செய்ய சாதகமான சூழல் நிலவும் என்ற நிலையில், இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி மயங்க் அகர்வால், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தென்ஆப்பிரிக்காவின் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களால் இருவரையும் அவுட்டாக்க முடியவில்லை.
பிலாண்டரும், ரபடாவும் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு தாக்குதலை தொடங்கினர். பிலாண்டர், ஸ்டம்பை குறி வைத்து பவுலிங் செய்தார். முதல் அரைமணி நேரம் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை எதிர்கொள்வதில் நமது வீரர்கள் சற்று தடுமாறினர். ரோகித், அகர்வாலும் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி தங்களை நிலை நிறுத்திக் கொண்ட பிறகு, மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் எதிரணியின் பந்து வீச்சை சிரமமின்றி எதிர்கொண்டு ரன்களை திரட்டினர். கேஷவ் மகராஜ், டேன் பீட், செனுரன் முத்துசாமி ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி பார்த்தும் இந்த ஜோடியை அசைக்க முடியவில்லை.
இந்தியா மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. மயாங்க் அகர்வால் 114 பந்தில் அரைசதம் அடித்தார்.
ரோகித் சர்மா 154 பந்தில் சதம்
அடித்தார். தொடக்க வீரராக களம் இறங்கிய முதல் போட்டியிலேயே சதம் அடித்தார். இந்திய
அணி 59.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம்
நிறுத்தப்பட்டது.
அத்துடன் தேனீர் இடைவேளை விடப்பட்டது. தேனீர் இடைவேளை முடிந்த பின்பும், மழை பெய்ததால்
முதல்நாள் ஆட்டம் அத்துடன் முடிவு பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.
Be the first to comment on "ரோகித் சர்மா சதத்தால் இந்தியா விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் முன்னிலை"