மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டை தேர்வு செய்ததற்காக பிசிசிஐ-யை முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கடுமையாக சாடியுள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-10034821

நியூ டெல்லி: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இரண்டாவது முறையாக இந்திய அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து,  2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்திய அணி வருகின்ற ஜூலை 12ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள தொடர்களுக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை கடந்த சில தினங்களுக்கு முன்பே பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், சட்டேஷ்வர் புஜாரா, முகமது ஷமி ஆகியோர் இடம்பெறவில்லை. அதற்குமாறாக, நடந்துமுடிந்த  ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும், நவ்தீப் சைனி மற்றும் முகேஷ் குமார் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

அதேசமயம், ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய சர்ஃபராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன், பிரியங்க் பஞ்சால் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கவில்லை. இதனால் இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படும் முறை புதிராக இருப்பதாக பரவலாக கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. குறிப்பாக சர்ஃபராஸ் கானுக்கு பிசிசிஐ தொடர்ந்து வாய்ப்பு வழங்க மறுப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்நிலையில் சர்ஃபராஸ் கானை ஏன் அணியில் சேர்க்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ள சுனில் கவாஸ்கர் இதுகுறித்து பேசுகையில், ”கடந்த மூன்று ரஞ்சிக் கோப்பை தொடரில் ஒவ்வொரு முறையும் தலா 100 சராசரியுடன் ரன்களை குவித்திருக்கிறார். இதற்குமேல், இந்திய டெஸ்ட் அணியில் சேர என்ன தகுதி வேண்டும்? பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றாலும், அணியிலாவது சேர்க்க வேண்டாமா? ரஞ்சிக் கோப்பையை நடத்தி என்ன பயன்? தடைசெய்துவிடுங்கள்” என்று பத்திரிகை ஒன்றுக்கு அவர் காட்டமாக பேட்டியளித்துள்ளார்.

இவரைத்தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசீம் ஜாஃபர் சில கேள்விகள் மூலமாக தேர்வுக் குழுவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் என 4 தொடக்க வீரர்களின் தேவை என்ன? மாறாக, உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃபராஸ் கானை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தேர்வு செய்திருக்கலாம்.

ரஞ்சிக் கோப்பை மற்றும் இந்தியா ஏ போட்டிகளில் சிறப்பாக விளையாடிவந்த அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் பிரியங்க் பஞ்சால் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு நீண்ட காலமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவேளை அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடாததால், கண்ணுக்குப் புலப்படாமல் போய்விட்டனரா? ஏனெனில் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளார்.

இதில் ஆச்சரியமான ஒன்று என்னவென்றால், அது ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டது தான். ஏனென்றால் அவர் எவ்வளவுக்கு எவ்வளவு பந்து வீசுகிறாரோ, அந்தளவிற்கு ஃபிட்டாகவும் இருக்கிறார். அப்படியிருக்கையில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” இவ்வாறு ஜாஃபர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Be the first to comment on "மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டை தேர்வு செய்ததற்காக பிசிசிஐ-யை முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கடுமையாக சாடியுள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*