மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-00037

அகமதாபாத்: இந்தியா – மேற்கிந்திய அணி மோதும் முதல் ஒருநாள் போட்டி நேற்று அகமதாபாத்தில்  விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனால் மேற்கிந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷாய் ஹோப் – பிராண்டன் கிங் ஜோடி பேட்டிங் செய்ய களமிறங்கினர். இதில் முகமது சிராஜின் பந்துவீச்சால் ஷாய் ஹோப் 8(10) ரன்களில் ஆட்டமிழந்தார்.மறுமுனையில் விளையாடிய பிராண்டன் கிங்  சூரியகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து 13(26) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய டேரன் பிராவோ அதே ஓவரில் 18(34) ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார்.

இதைதொடர்ந்து சாஹல் பந்துவீச்சால் நிக்கோலஸ் பூரான் 18(25) ரன்களுடனும் , பொலார்ட் 0(1) ரன்களுடனும், புருக்ஸ் 12(26) ரன்களுடனும் ஆட்டமிழந்து அடுத்தடுத்து வெளியேறினர்.

இந்நிலையில் அணியை காப்பாற்ற ஜேசன் ஹோல்டர் – ஃபெபியன் ஆலன் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருப்பினும் ஹோல்டர் 4 பவுண்டரி உட்பட 57(71) ரன்களும், ஃபெபியன் ஆலன் 2 பவுண்டரி உட்பட 29 (43)ரன்களும் எடுத்தபோது அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக களமிறங்கிய அல்ஜாரி ஜோசப்பும் 13 (16) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் மேற்கிந்திய தீவுகள் 43வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து 176 ரன்களுக்கு சுருண்டது.இதில் இந்தியா சார்பாக சாஹல் 4 விக்கெட்களையும், சுந்தர் 3 விக்கெட்களையும் ,பிரசித்கிருஷ்ணா 2 விக்கெட்களையும், சிராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 177 ரன்களை  இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா-இஷான் கிஷான் ஜோடியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் 10 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 60(51) ரன்களில் எல்பிடபள்யூ ஆனார்.

தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 2 பவுண்டரி உட்பட 8(4) ரன்னிலும், இஷான் கிஷான் 2 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 28(36) ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 2 பவுண்டரி உட்பட 11(9) ரன்களில் ரன்அவுட் ஆனார்.

இந்நிலையில் இறுதியாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் – தீபக் ஹூடா ஜோடி மேற்கொண்டு விக்கெட் இழக்காமல் பொறுப்புடன் விளையாடியதால் இந்திய அணி 28 ஓவரிலேயே 178 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதில் தீபக் ஹூடா 2 பவுண்டரி உட்பட 26(32) ரன்களும், சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரி உட்பட 34(36) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர் . இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை  பெற்றுள்ளது.