மேன் ஆஃப் தி மேட்ச் விருதை நடுவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்று சேவாக் காட்டம்

சூப்பர் ஓவருக்கு முன்பு, ரபாடா வீசிய 19ஆவது ஓவரில் கிறிஸ் ஜோர்டன் இரண்டு ரன்கள் எடுத்தார். ஆனால், ஒரு ரன் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்பட்டது. இது சர்ச்சையான நிலையில் விரேந்திர சேவாக் போன்றவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

ஐ.பி.எல். 13ஆவது சீசன் இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்ததால் போட்டி டிரா ஆனது. பின்னர் சூப்பர் ஓவரில் ரபாடா மிரட்டலாகப் பந்து வீசியதால் டெல்லி அணி வெற்றிபெற்றது.

இதனையடுத்து போட்டி சுமுகமாக முடிந்துவிட்டது என கருதிய நிலையில், புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார் சேவாக். அதாவது, “பஞ்சாப் அணி தோல்வியடைந்ததற்கு, நடுவர்தான் காரணம். அவருக்கு மேன் ஆஃப் தி மேட்ச் விருது கொடுத்திருந்தால்தான் பொருத்தமாக இருந்திருக்கும்”எனத் தெரிவித்துள்ளார்.

போட்டி சூப்பர் ஓவருக்கு நகரும் முன், 19ஆவது ஓவரில் ரபாடா வீசிய பந்தில் கிறிஸ் ஜோர்டன் இரண்டு ரன்களை எடுத்தார். ஆனால், ஒரு ரன் மட்டுமே நடுவரால் வழங்கப்பட்டது. பேட் கிரீஸுக்கு உள்ளே சென்றதா இல்லையா என்பதை டி.வி. அம்பையரிடம் கேட்காமல், தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜோர்டன் இரண்டு ரன்கள் ஓடியது செல்லும் என்று ரிப்ளேவில் தெரிய வந்ததை அடுத்து அணி உரிமையாளர் பிரித்தி ஜிந்தா, விரேந்திர சேவாக் போன்றவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக சேவாக் வெளியிட்டுள்ள ட்வீட்டில்,

“ஆட்ட நாயகன் விருது தவறாக வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணிக்கு ஒரு ரன்னை குறைத்து வழங்கிய நடுவர்தான் அந்த விருதுக்குத் தகுதியானவர்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் அணி உரிமையாளர் பிரித்தி ஜிந்தா வெளியிட்ட ட்வீட்டில், தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். “துபாய் வந்த பிறகு பல நாட்கள் தனிமை முகாமில் இருந்துள்ளேன். 5 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன். அப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருந்த என்னை, நடுவரின் பாரபட்சமான தீர்ப்பு கடுமையாக பாதித்துள்ளது. அவர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

அதேபோல டெல்லி அணியின் முன்னாள் பயிற்சியாளர் அசோக் சோப்ரா வெளியிட்டுள்ள ட்வீட்டில், “டி.வி. அம்பையரால் மட்டுமே துல்லியமாகக் கணிக்கக் கூடிய ஒரு விஷயத்தை, களத்தில் இருக்கும் நடுவர் தன்னிச்சையாகக் கணித்து கூறியதன் விளைவு, பஞ்சாப் அணி 2 புள்ளிகளை இழந்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.

Be the first to comment on "மேன் ஆஃப் தி மேட்ச் விருதை நடுவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்று சேவாக் காட்டம்"

Leave a comment

Your email address will not be published.


*