மூன்றாவது டி20 போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது

www.indcricketnews.com-indian-cricket-news-100146
Dinesh Karthik of India plays a shot during the 3rd T20I between India and South Africa held at the Holkar Cricket Stadium, Indore, India on the 4th October 2022 Photo by Faheem Hussain / Sportzpics for BCCI

இந்தூர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேற்று இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரரான கேப்டன் டெம்பா பவுமா 3(8) ரன்களுடன் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த குயிண்டன் டி காக்-ரீலே ரூஸோவ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த நிலையில், அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்திய டி காக் 68(43) ரன்கள் எடுத்தபோது ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

அதன்பின்னர் ரூஸோவுடன் ஜோடி சேர்ந்த ஸ்டிரிஸ்டன் ஸ்டப்ஸும் தொடக்கம் முதலே அதிரடி காட்டாத் தொடங்கினார் . இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூஸோவ் 48 பந்துகளில் சதம் விளாசி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தார்.

ஆனால் மறுமுனையில் ஸ்டப்ஸ் 23(18) ரன்கள் எடுத்தபோது தீபக் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லர் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசி அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டு இழப்பிற்கு 227 ரன்களை குவித்தது.

இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோஹித் சர்மா, ரபாடா வீசிய ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, அவரைத்தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 1(4) ரன்னோடு வெய்ன் பர்னெல் பந்துவீச்சில் எல்பிடபள்யூ ஆகி பெவிலியன் திரும்பினார். 

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ரிஷப் பந்த்-தினேஷ் கார்த்திக் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இருப்பினும் லுங்கி இங்கிடி பந்துவீச்சில் 27(14) ரன்களை விளாசிய ரிஷப் பந்த் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 46(21) ரன்கள் எடுத்தபோது கேஷவ் மகாராஜ் பந்துவீச்சில் நடையைக்கட்டினார்.

இதனைத்தொடர்ந்து  களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 8(6), அக்ஸர் படேல் 9(8), ஹர்ஷல் படேல் 17(12), ரவிச்சந்திரன் அஸ்வின் 2(4) ஆகியோர் சொற்ப ரன்களோடு வந்த வேகத்தில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினர் .

இறுதியில் பார்ட்னர்ஷிப் அமைத்த தீபக் சஹார்-உமேஷ் யாதவ் ஜோடி அதிரடியாக விளையாடி பவுண்டரிகளாக விளாசி வந்த நிலையில், ட்வைன் பிரிட்டோரியஸ் பந்துவீச்சில் தீபக் சஹார் 31(17) ரன்களுடனும், தொடர்ந்துவந்த முகமது சிராஜ் 5(7) ரன்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் 18.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 178 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றியுடன் டி20 தொடரை நிறைவுசெய்துள்ளது.

Be the first to comment on "மூன்றாவது டி20 போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது"

Leave a comment

Your email address will not be published.


*