கொல்கத்தா: கடந்த 17ஆம் தேதி முதல் இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும் ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது.
மேலும் நேற்று( நவம்பர் 17 ) கொல்கத்தாவில் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா – இஷான் கிஷன் ஜோடியுடன் களமிறங்கியது. 6 ஓவர்களில் 69/0 ரன்கள் என இந்திய அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயரத்துவங்கியது.
7ஆவது ஓவரை வீச வந்த கேப்டன் சாண்ட்னர் இஷான் கிஷனை 29 (21) பெவிலியனுக்கு அனுப்பினார்.இதைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 0 (4) ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பிறகு ரோகித் ஷர்மாவுடன் இணைந்த ரிஷப் பந்த் நிலைத்து நின்று விளையாடாமல் 4 (6) ரன்களுடன் ஆட்டமிழந்து ரோஹித் ஷர்மாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தினார்.
மேலும் இஷ் சோதி வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்த ரோஹித் ஷர்மா 56 (31) ரன்களுடன் ஆட்டமிழந்தார். மேலும் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 20 (15), ஸ்ரேயஷ் ஐயர் 25 (20), ஹர்ஷல் படேல் 18(11) ரன்கள் என பெரிய ஸ்கோர் ஒன்றும் எடுக்காமல் அடுத்து அடுத்து வெளியேறினர். கடைசி ஓவரில் மிரட்டலாக விளையாடிய தீபக் சஹார் 2 பவுண்டரி 1 சிக்ஸர் என மொத்தம் 21(8) ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், இந்தியா 20 ஓவருக்கு 7 விக்கெட் இழந்து 184 ரன்கள் எடுத்தது.
185 ரன்களை இலக்காக கொண்டு களிமறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேரில் மிட்செல் 5 (6), மார்க் சாப்மேன் 0 (2), கிளென் பிலிப்ஸ் 0 (4) ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய மார்டின் கப்தீல் 51(36) ரன்கள் விளாசி அசத்தினார். அடுத்து களமிறங்கிய செய்ஃபர்ட் 17 (18) ஜேம்ஸ் நீஷம் 3 (7) ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இதனால், நியூசிலாந்து அணி இலக்கை அடைய முடியாமல் 17.2 ஓவர்கள் முடிவிலேயே 10 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டும் எடுத்து, 73 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதனால் இந்தியா 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைபற்றியது.
இதில் அக்சர் படேல் 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஹர்ஷல் படேல் 2 விக்கெட்களையும், வெங்கடேஷ் ஐயர் ,யுஜ்வேந்திர சாஹல், தீபக் சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Be the first to comment on "மூன்றாவது டி20 போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றியைப் பெற்றது."