முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

www.indcricketnews.com-indian-cricket-news-080

கொல்கத்தா: அண்மையில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து புதன்கிழமையான(பிப்:16) நேற்று வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் வெல்லும் முனைப்புடன் முதல் டி20 போட்டியில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா களமிறங்கியுள்ளது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதில் முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிராண்டன் கிங் முதல் ஓவரிலேயே புவனேஷ்வர் பந்துவீச்சில் 4(5)ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய கைல் மேயர்ஸ் 31(24)ரன்கள் எடுத்து சாஹல் பந்துவீச்சில் எல்பிடபள்யூ-ஆகி நடையைக்கட்டினார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் 4(10) மற்றும் ரோவ்மேன் பாவெல் 2(3) ஆகிய இருவரும் ஒரே ஓவரில், அறிமுக வீரர் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய அகில் ஹோசைனும் 10(12) தீபக் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழக்க,  வெஸ்ட் இண்டீஸ் அணி 14 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வந்தது.

அப்போது கேப்டன் பொல்லார்ட் – பூரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் பூரன் அதிரடியாக விளையாடி விறுவிறுப்பாக ஸ்கோர் குவித்து வந்த நிலையில், ஹர்ஷல் படேல் வீசிய 17வது ஓவரில் 61(43)ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பொல்லார்ட் 24(19) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.  இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா- இஷான் கிஷான் ஜோடியில் ரோகித் ஷர்மா 4 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 40(19)ரன்களும் ,மறுமுனையில் விளையாடிய இஷான் 4 பவுண்டரி உட்பட 35(42)ரன்களும் எடுத்தபோது ரோஸ்டன் சேஸ் வீசிய பந்திலேயே அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து  ஃபேபியன் ஆலன் பந்துவீச்சில் விராட் கோலியும் 17(13)  ஷெல்டன் காட்ரெல் பந்துவீச்சில் ரிஷப் பந்த்-ம் 8(8) அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில் அணியை காப்பாற்ற களமிறங்கிய சூர்யக்குமார் யாதவ் 5 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 34(18)ரன்களுடனும், வெங்கடேஷ் ஐயர் 2 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 24(13) ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால் இந்திய அணி  7 பந்து மீதமிருந்த நிலையில் 18.5வது ஓவருக்கு 4 விக்கெட் இழந்து 162 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.