முதல் ஓவரில் 27 ரன்கள், பிரித்வி ஷா மிரட்டல்…டெல்லி அணி அபார வெற்றி!

Prithvi Shaw-powers Delhi Capitals to 7-wicket win over Kolkata Knight Riders
Prithvi Shaw-powers Delhi Capitals to 7-wicket win over Kolkata Knight Riders

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

ஐபிஎல் தொடரின் 25ஆவது ஆட்டத்தில் இன்று டெல்லி கேபிடல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில்லும் நிதிஷ் ராணாவும் களமிறங்கினர். இந்த ஐபிஎல் தொடரில் துவக்க முதலே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கில், இப்போட்டியில் நிலைத்து நின்று விளையாடினார். ஆனால் நிதிஷ் ராணா 12 பந்துகளில் 15 ரன்களுக்கு வெளியேறினார். இவரை அக்‌ஷர் படேல் வெளியேற்றினார்.

அடுத்தாக வந்த ராகுல் திரிபாதியும் சிறிது நேரத்திலேயே ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 9.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 69 ஆக இருந்தது. கேப்டன் மோர்களும் சுனில் நரைனும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிந்து அதிர்ச்சியளித்தனர். லலித் யாதவ் இவர்களை காலி செய்தார். மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிக் கொண்டிருந்த ஷுப்மன் கில், 13ஆவது ஓவரில் 43 ரன்களுக்கு அவுட் ஆனார். அதிரடி வீரர் ஆந்த்ரெ ரஸ்ல் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடியதால் கொல்கத்தா அணி 150 ரன்களைக் கடந்தது. கடைசி வரை களத்தில் இருந்த ரஸல் 27 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் எடுத்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.

இலக்கை துரத்திய டெல்லி அணியில் பிரித்வி ஷா, ஷிகர் தவன் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். பிரித்வி ஷா, ஷிவம் மாவி வீசிய முதல் ஓவரில் தொடர்ந்து 6 பவுண்டரிகள் அடித்து அசத்தினார். இதனால், கொல்கத்தா அணிக்கு துவக்கத்திலேயே நெருக்கடி ஏற்பட்டது. பிரித்வியின் அதிரடி ஆட்டம் அடுத்தடுத்து தொடர்ந்தது. இதனால், டெல்லி அணி பவர் பிளேவில் 67/0 ரன்கள் குவித்தது.

சிறப்பாக விளையாடி வந்த தவன் 47 பந்துகளில் 46 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இருப்பினும், மறுமுனையில் பிரித்வி ஷாவின் அதிரடி தொடர்ந்தது. இறுதியில் 41 பந்துகளில் 82 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்து ரிஷப் பந்த் 16 (8), மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 6* (3) இருவரும் இறுதிவரை களத்தில் இருந்தனர். டெல்லி கேபிடல்ஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் வெற்றி இலக்கை அடைந்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Be the first to comment on "முதல் ஓவரில் 27 ரன்கள், பிரித்வி ஷா மிரட்டல்…டெல்லி அணி அபார வெற்றி!"

Leave a comment

Your email address will not be published.


*