முகமது ஷமி வீசிய கடைசிஓவரில் ஆஸ்திரேலியாவை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி.

www.indcricketnews.com-indian-cricket-news-100184
BRISBANE, AUSTRALIA - OCTOBER 17: KL Rahul of India bats during the ICC 2022 Men's T20 World Cup Warm Up Match between Australia and India at The Gabba on October 17, 2022 in Brisbane, Australia. (Photo by Albert Perez - ICC/ICC via Getty Images)

பிரிஸ்பேன்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேனில் உள்ள காப்பா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல்-ரோஹித் ஷர்மா ஜோடியில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ராகுல் 6 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 57(33) ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே ஆஷ்டன் ஆகர் பந்துவீச்சில் ரோகித் ஷர்மா 15(14) ரன்களுடன் நடையைக்கட்டினார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும், மிட்ஷெல் ஸ்டார்க் பந்துவீச்சில் 19(13) ரன்களுடன் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஹர்திக் பாண்டியா 2(5) ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த சூர்யகுமார் யாதவ்-தினேஷ் கார்த்திக் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த நிலையில், கேன் ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக் 20(14) ரன்களுடன் வெளியேறினார்.

கடைசி ஓவர்வரை களத்திலிருந்த சூர்யகுமார் 6 பவுண்டரி, 1 சிக்சர் உட்பட 50(33) ரன்கள் எடுத்தபோது கேன் ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது.

இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஆரோன் ஃபின்ச்-மிட்செல் மார்ஷ் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்ஷ் 35(18) ரன்களைச் சேர்த்து புவனேஷ்வர் குமாரிடம் விக்கெட்டை பறிகொடுக்க, தொடர்ந்துவந்த ஸ்டீவ் ஸ்மித் 11(12) ரன்களில் யுஸ்வேந்திர சஹால் பந்துவீச்சில் வெளியேறினார்.

ஆனால் மறுமுனையில் ஃபின்ச் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 23(16) ரன்களுடன் புவனேஷ்வர் குமாரிடம் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் 7(7) ரன்களில் அர்ஷ்தீப் சிங்கிடம் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 17.2 ஓவர்களில் 171/4 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது.

இந்நிலையில் 7 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 79(54) ரன்கள் எடுத்திருந்த ெஃபிஞ்ச், ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்ப, அடுத்த பந்திலேயே டிம் டேவிட் 5(2) ரன் அவுட்டாகி நடையைக்கட்டினார். இந்நிலையில் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் முகமது ஷமி பந்துவீசினார். அந்த ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்து பேட் கம்மின்ஸ் 7(6), ஆஷ்டன் ஆகர் 0(1), ஜோஸ் இங்கிலிஸ் 0(1) ,கேன் ரிச்சர்ட்சன் 0(1) என அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.

Be the first to comment on "முகமது ஷமி வீசிய கடைசிஓவரில் ஆஸ்திரேலியாவை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி."

Leave a comment

Your email address will not be published.


*